மாடியில் இருந்து விழுந்த பெண் ஊழியர் சாவு; கொலையா? போலீஸ் விசாரணை

பெங்களூருவில் மாடியில் இருந்து விழுந்த பெண் ஊழியர் உயிரிழந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2022-10-27 18:45 GMT

பெங்களூரு:

பெங்களூரு எலகங்கா பழைய டவுன், காந்திநகர், 2-வது மெயின் ரோடு, 1-வது கிராசில் உள்ள ஒரு அடுக்குமாடி வீட்டில் வாடகைக்கு வசித்தவர் பிரேமா (வயது 48). தனது கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக, அவரை பிரேமா பிரிந்து விட்டார். கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக பிரேமா தனியாக வசித்து வந்தார். பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் ஊழியராக அவர் வேலை பார்த்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு 2-வது மாடியில் இருந்து பிரேமா கீழே விழுந்து கிடந்தார். தலையில் காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் உயிர் இழந்தார்.

இதுபற்றி அறிந்ததும் எலகங்கா போலீசார் விரைந்து வந்து பிரேமா உடலை கைப்பற்றி விசாரித்தனர். தான் வசித்த 2-வது வீட்டின் மாடியில் இருந்து பிரேமா கால் தவறி விழுந்து பலியானாரா?, மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்தாரா? அல்லது அவரை மாடியில் இருந்து யாரும் கீழே தள்ளி கொலை செய்தார்களா? என்பது மர்மமாக உள்ளது. இதுகுறித்து எலகங்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்