புதுச்சேரியில் சிறுமி கொலை சம்பவத்தை கண்டித்து முழு அடைப்பு போராட்டம்

புதுச்சேரியில் 9-வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

Update: 2024-03-08 02:08 GMT

புதுச்சேரி,

புதுச்சேரி சோலைநகரை சேர்ந்த 9-வயது சிறுமி தனது வீட்டின் முன் கடந்த 2-ந்தேதி விளையாடிக் கொண்டிருந்த நிலையில் திடீரென மாயமானாள். அவளை தேடியும் கண்டுபிடிக்க முடியாதநிலையில் பெற்றோர் முத்தியால்பேட்டை போலீசில் புகார் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து சிறுமியை தேடும் பணியில் போலீசார் தீவிரம் காட்டினர். கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில் கடைசியாக சிறுமி நடந்து செல்வது போன்ற ஒரே ஒரு பதிவு மட்டுமே பதிவாகி இருந்தது. அதை வைத்து சிறுமி வெளியில் செல்லவில்லை என்பதை போலீசார் உறுதி செய்தனர். தொடர்ந்து தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில், 4 நாட்களுக்கு பின் மாணவியின் உடல் அவளது வீட்டின் அருகே சுமார் 100 அடி தூரத்தில் உள்ள சாக்கடை கால்வாயில் இருந்து கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் உடல் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பயங்கர சம்பவம் தொடர்பாக கஞ்சா வாலிபரான கருணாஸ் (வயது19), விவேகானந்தன் (57) ஆகியோரை போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதில் சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு கொடூரமாக கொன்று சாக்கடை கால்வாயில் வீசியது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். கொலையான சிறுமியின் உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நேற்று அடக்கம் செய்யப்பட்டது. இதில் திரளான பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கக்கோரி பொதுமக்கள், மாணவர்கள், சமூக அமைப்புகள் என பல்வேறு தரப்பினரும் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனால் புதுவையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.

இந்த நிலையில், 9-வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், சிறுமியின் சாவுக்கு நீதி கேட்டும் மற்றும் போதைப்பொருட்கள் புழக்கத்தை தடுக்க தவறிய அரசைக் கண்டித்தும் புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தியா கூட்டணி மற்றும் அ.தி.மு.க. சார்பில் போராட்டம் நடந்து வருகிறது. இந்த முழுஅடைப்பு போராட்டம் காலை 6 மணிமுதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.

முழு அடைப்பு காரணமாக புதுச்சேரியில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படவில்லை. போராட்டத்தையொட்டி பல்வேறு பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகள் வழக்கம்போல் செயல்படும் என்றும் மாணவ-மாணவிகள் அச்சமின்றி தேர்வு எழுதலாம் எனவும் அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்