பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மத்திய அரசு ஊழியர்கள் மீது பதிவான வழக்கு ரத்து
பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மத்திய அரசு ஊழியர்கள் மீது பதிவான வழக்கை ரத்து செய்து கர்நாடக ஐகோர்ட்டு தீர்ப்பளித்தது.
பெங்களூரு:-
பெங்களூருவில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான நிறுவனத்தில் 56 வயது பெண் பணியாற்றி வருகிறார். கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அந்த பெண்ணுக்கு, அதே நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றும் நாகராஜ் மற்றும் நரசிம்மமூர்த்தி ஆகியோர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
அத்துடன் அந்த பெண்ணுக்கு 2 பேரும் கொலை மிரட்டலும் விடுத்திருந்தனர். இதுதொடர்பாக அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி 7-ந் தேதி நாகராஜ், நரசிம்மமூர்த்தி மீது யஷ்வந்தபுரம் ேபாலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். மேலும். போலீசாரும், பெங்களூரு கோர்ட்டில் 2 பேர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார்கள்.
இந்த நிலையில், தங்கள் மீது பதிவான வழக்கை ரத்து செய்ய கோரியும், கீழ் கோர்ட்டில் நடைபெறும் விசாரணைக்கு தடை விதிக்க கோரியும் நாகராஜ், நரசிம்மமுர்த்தி ஆகிய 2 பேரும் கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
அந்த மனு மீதான விசாரணை ஐகோர்ட்டு நீதிபதி முன்னிலையில் நடைபெற்றது. அப்போது பெண்ணுக்கு 2 பேரும் பாலியல் தொல்லை கொடுத்ததற்கான சாட்சி, ஆதாரங்கள் இல்லாததால், அவர்கள் மீது பதிவான வழக்கு ரத்து செய்யப்படுவதாக நீதிபதி தீர்ப்பு கூறியுள்ளார்.