ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் பாம்பு கடித்த சிறுவன் பரிதாப சாவு
சக்லேஷ்புரா அருகே ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் பாம்பு கடித்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
ஹாசன்:
ஹாசன் மாவட்டம் சக்லேஷ்புரா தாலுகா தொட்டகல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் யஷ்வந்த். இவரது மனைவி கவுரி. இவர்களது மகன் ரோஷன் (வயது 4). அதே கிராமத்தில் உள்ள அங்கன்வாடியில் படித்து வந்தான். நேற்று முன்தினம் காலை அங்கன்வாடி ஊழியர், குழந்தைகளை அழைத்து வருவதற்காக வெளியே சென்றிருந்தார். ரோஷன் அங்கன்வாடியில் இருந்தான். சக குழந்தைகளுடன் விளையாடி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது பாம்பு ஒன்று அங்கன்வாடி வளாகத்திற்குள் புகுந்ததாக கூறப்படுகிறது.
அந்த பாம்பு சிறுவன் ரோஷனை கடித்துள்ளது. இதில் வாயில் நுரைத்தள்ளியப்படி சிறுவன் உயிருக்கு போராடி கொண்டிருந்தான். இதை பார்த்த அங்கன்வாடி ஊழியர், பெற்றோருக்கு தகவல் அளித்தார். விரைந்து வந்த பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர், சிறுவனை ஹெட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சக்லேஷ்புராவிற்கு அழைத்து செல்லும்படி கூறினர்.
அதன்படி பெற்றோர் ரோஷனை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல முயற்சித்தனர். இதற்காக ஆம்புலன்சை அழைத்தனர். ஆனால் நீண்ட நேரமாகியும் ஆம்புலன்ஸ் வரவில்லை. இதையடுத்து மோட்டார் சைக்கிளில் சிறுவனை சக்லேஷ்புரா அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் தாமதமாக ஆம்புலன்ஸ் வந்தது. இதையடுத்து ஆம்புலன்சில் சிறுவன் சக்லேஷ்புரா அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டான். அங்கு சிறுவனை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவன் இறந்துவிட்டதாக கூறினர்.
இதை கேட்டு கதறி அழுத பெற்றோர், உரிய நேரத்துக் ஆம்புலன்ஸ் வராததால் மகன் இறந்ததாக குற்றம் சாட்டினர். மேலும் இது குறித்து யசலூர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் யசலூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.