வீட்டில் இருந்து வாக்களித்த சில நிமிடங்களில் 95 வயது மூதாட்டி உயிரிழப்பு

உள்ளாட்சி தேர்தல் மற்றும் மக்களவை தேர்தலில் வாக்களிக்க முடியாத சூழலில், இந்த முறை வாக்களிக்க வேண்டும் என குடும்பத்தினரிடம் மூதாட்டி விருப்பம் தெரிவித்து உள்ளார்.

Update: 2024-05-18 06:43 GMT

ஹவுரா,

மேற்கு வங்காளத்தின் ஹவுரா நகரில் வசித்து வந்த மூதாட்டி காயத்ரி முகர்ஜி (வயது 95). செராம்பூர் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட ஹவுரா நகரில் ஜெகத்பல்லவ்பூர் பகுதியை சேர்ந்த பதிஹால் என்ற இடத்தில் வசித்து வந்திருக்கிறார்.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி, 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் வாக்களிக்க ஓட்டு சாவடிக்கு செல்வதற்கு பதிலாக, வீட்டில் இருந்தபடி வாக்களிப்பதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.

இந்நிலையில், காயத்ரியின் குடும்பத்தினர் கூறும்போது, அவர் வீட்டில் இருந்து வாக்களிக்க அனுமதிக்கும்படி அரசு நிர்வாகத்திடம் கேட்டு கொண்டோம். வயது முதிர்வால் நீண்டகாலம் பாதிக்கப்பட்டு இருந்த அவருக்கு, அரசியல் விவகாரங்களில் அதிக ஆர்வம் உண்டு. தொலைக்காட்சியில் செய்திகளை கவனிப்பது வழக்கம் என கூறினர்.

உடல்நல குறைவால், உள்ளாட்சி தேர்தல் மற்றும் மக்களவை தேர்தலில் அவரால் வாக்களிக்க முடியவில்லை. இந்த முறை, வாக்களிக்க வேண்டும் என குடும்பத்தினரிடம் அவர் விருப்பம் தெரிவித்து உள்ளார்.

இதன்படி, நேற்று மதியம் காயத்ரி வாக்களிக்க தேவையான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்திருந்தது. எனினும், வாக்களித்த சிறிது நேரத்திலேயே அவருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து அவர் உயிரிழந்து விட்டார்.

ஜனநாயக கடமையை நிறைவேற்றிய 8-வது நிமிடம் 95 வயது மூதாட்டி உயிரிழந்தது அந்த பகுதி மக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவருடைய மறைவுக்கு ஆளும் திரிணாமுல் காங்கிரசின் மந்திரி அரூப் ராய் இரங்கல் தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்