ஒரே குடும்பத்தில் 6 பேர் நசுங்கி சாவு
கொப்பல் அருகே கார்-லாரி நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
பெங்களூரு:-
6 பேர் உடல் நசுங்கி சாவு
கொப்பல் மாவட்டம் குஸ்டகி தாலுகா கலகேரி கிராமம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நேற்று லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அதே சாலையில் எதிரே ஒரு கார் வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில், திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய கார், எதிரே வந்த லாரி மீது மோதியது. அதாவது, காரும், லாரியும் நேருக்கு நேர் மோதி கொண்டன. இதன் காரணமாக காரின் முன்பகுதி லாரிக்கு அடியில் சென்று அப்பளம் நொறுங்கி போனது.
இந்த கோர விபத்தில் காரில் இருந்த 6 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். விபத்து நடந்ததும் கிராம மக்கள் ஓடி வந்து காருக்குள் இருந்தவர்களை மீட்க முயன்றனர். ஆனால் 6 பேரும் உடல் நசுங்கி உயிரிழந்ததை கண்டு அதிர்ந்து போயினர். லாரிக்குள் காரின் முன்பகுதி சிக்கி கொண்டதால், வெளியே எடுக்க முடியாமலும் போனது. தகவல் அறிந்ததும் குஸ்டகி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
காரின் டயர் வெடித்ததால்...
பின்னர் நீண்ட நேர போராட்டத்தை தொடர்ந்து காருக்குள் இருந்து 6 பேரின் உடல்களும் மீட்கப்பட்டது. பின்னர் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. போலீஸ் விசாரணையில், பலியானவர்கள் பெயர் ராஜப்பா பனகோடி, ராகவேந்திரா, அக்ஷய் சிவசரணா, ஜெயஸ்ரீ, ரஷ்மிகா மற்றும் ராகி என்று தெரியவந்தது. இவர்கள் 6 பேரும் விஜயாப்புராவில் இருந்து வாடகை காரில் பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, கொப்பல் மாவட்டம் குஸ்டகி அருகே கலகேரி பகுதியில் வரும் காரின் டயர் வெடித்ததால், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த காா் தாறுமாறாக ஓடி எதிரே வந்த லாரி மீது பயங்கரமாக மோதியதும், இதில் 6 பேர் உயிரிழந்ததும் தெரியவந்தது. உயிரிழந்த 6 பேரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து குஸ்டகி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் குஸ்டகியில் நேற்று சோகத்தை ஏற்படுத்தியது.