6 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த 58 வயது மதபோதகர்
6 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தது மட்டுமல்லாமல் தற்போது 30 வயது இளம்பெண்ணை, 58 வயது மதபோதகர் ஒருவர் திருமணம் செய்ய திட்டமிட்டார்.;
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் தாவணகெரே(மாவட்டம்) டவுன் ஜெயநகர் பகுதியில் ஒரு தேவாலயம் செயல்பட்டு வருகிறது. இந்த தேவாலயத்தில் சந்திரசேகர்(வயது 58) என்பவர் மதபோதகராக இருந்து வருகிறார். இவரது மகள் டெய்சி பிரியா(33). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தலித் சமுதாயத்தைச் சேர்ந்த பெண்ணை கிறிஸ்தவத்துக்கு மதமாற்றம் செய்து, திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டதாக பஞ்சாரா சமுதாயத்தினர் குற்றம்சாட்டினர். அதையடுத்து அவரிடம் போலீசாரும் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விவகாரத்தில் கிறிஸ்தவ சமுதாய பாஸ்டர் அசோசியேஷன், கிறிஸ்தவ மக்கள் மனித உரிமைகள் கூட்டமைப்பு, மாவட்ட கிறிஸ்தவ நலச்சங்கம் ஆகியவற்றின் நிர்வாகிகளும் கண்டனம் தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் மதபோதகர் மீது அவரது சொந்த மகளான டெய்சி பிரியா நேற்று தாவணகெரே டவுன் போலீசில் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி புகார் அளித்தார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
எனது தந்தையும், மதபோதகருமான ராஜசேகர் தேவாலயத்துக்கு பிரார்த்தனைக்காக வரும் பெண்களிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக 6 பெண்களுக்கு அவர் அதிக அளவில் பாலியல் தொல்லை கொடுத்து அவர்களின் வாழ்க்கையை சீரழித்துவிட்டார். சில பெண்களை அவர் பாலியல் பலாத்காரமும் செய்துள்ளார்.
மேலும் அவர் ஆசிரியையை திருமணம் செய்வதாக கூறி நெருங்கி பழங்கினார். அந்த ஆசிரியையின் 'நாமினி'யாக இவர் தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டார். அதற்கான ஆவணங்களில் ஆசிரியையிடம் பேசி கையெழுத்தும் பெற்றுக் கொண்டார். தற்போது அவர் என்னைவிட 3 வயது சிறிய பெண்ணான 30 வயது இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளார். அதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்ததால் என்னையும் மிரட்டுகிறார். அதனால் அவர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் இதுபற்றி தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் மதபோதகர் ராஜசேகர் மீது பல்வேறு கிறிஸ்தவ அமைப்புகளும் போலீசில் புகார் அளிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.