56% பொய்யான பாலியல் வன்கொடுமை வழக்குகள்; ராஜஸ்தான் முதல்-மந்திரி பேச்சுக்கு தேசிய மகளிர் ஆணையம் கடும் கண்டனம்

ராஜஸ்தானில் பதிவாகும் 56 சதவீத பாலியல் வன்கொடுமை வழக்குகள் பொய்யானவை என கூறிய முதல்-மந்திரியை தேசிய மகளிர் ஆணையம் கடுமையாக சாடியுள்ளது.

Update: 2022-09-03 09:42 GMT



புதுடெல்லி,



நாட்டில் 2021-ம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் வரிசையில் ராஜஸ்தான் 2-வது இடத்தில் உள்ளது. தொடர்ந்து 3-வது ஆண்டாக நாட்டில், ராஜஸ்தானில் பாலியல் வன்கொடுமை வழக்குகளின் எண்ணிக்கை அதிக அளவில் பதிவாகின்றன என தேசிய குற்ற ஆவண பதிவுகளுக்கான வாரியம் தெரிவித்து உள்ளது.

இந்நிலையில், ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட் கூறும்போது, ராஜஸ்தானில் பதிவாகும் பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் பாதிக்கும் கூடுதலான வழக்குகள் பொய்யானவை. பாலியல் வன்கொடுமை வழக்குகள் அதிகரிப்புக்கு கட்டாய எப்.ஐ.ஆர். நடைமுறையே காரணம் என கூறியுள்ளார்.

தொடர்ந்து அவர், யார் பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுகின்றனர்? பல வழக்குகளில், உறவினர்கள் உள்பட பாதிக்கப்படும் நபர்களுக்கு நன்கு தெரிந்தவர்களே ஈடுபடுகின்றனர். பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் 56 சதவீதம் போலியானவை.

பொய்யான வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. இந்த விவகாரத்தில் நாங்கள் நடவடிக்கையை தொடங்கியுள்ளோம் என கூறியுள்ளார். டி.ஜி.பி. எனக்கு பக்கத்தில் நிற்கிறார். பொய்யான வழக்கு தாக்கல் செய்பவர்களை நாங்கள் தப்ப விடமாட்டோம் என கூறி கொள்ள விரும்புகிறேன்.

இதனால், பொய்யான வழக்குகளை பதிவு செய்து மாநிலத்தின் மீது அவதூறு ஏற்படுத்துவதற்கு மற்றவர்களுக்கும் தைரியம் வராது என பேசியுள்ளார். அவரது இந்த பேச்சுக்கு தேசிய மகளிர் ஆணைய தலைவி ரேகா சர்மா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

இப்படி பேசுவதற்கு முன், ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட், தனது மாநிலம் பற்றிய உண்மையான விவரங்களை ஏற்க மறுக்கிறார். ராஜஸ்தான் போலீசாரும் மிக சரியாக இதே மனநிலையிலேயே உள்ளனர். அந்த மனநிலையுடனேயே அவர்களும் பணியாற்றி வருகின்றனர். அதனாலேயே, ராஜஸ்தான் பெண்களுக்கு நீதி கிடைக்கவில்லை என ரேகா டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்