முப்படைகளுக்கு 45 ஆயிரம் கோடி ரூபாய்க்கு புதிய தளவாடங்கள்

இந்திய ராணுவத்தின் முப்படைகளுக்கும் புதிய ராணுவ தளவாடங்களை கொள்முதல் செய்ய பாதுகாப்புத்துறை முடிவு செய்துள்ளது.

Update: 2023-09-19 02:01 GMT

டெல்லி,

கடந்த வெள்ளிக்கிழமை அன்று பாதுகாப்பு துறையின் கொள்முதல் குழு கூட்டம் டெல்லியில் கூடியது. பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் இக்கூட்டம் கூடியது. இதில் இந்திய ராணுவத்தின் முக்கிய அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் இந்திய ராணுவத்திற்கு புதியதாக 9 வகையான ராணுவ தளவாடங்கள் வாங்குவதற்கு பேச்சுவார்த்தை நடந்தது. அதன் படி சுமார் 45 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ராணுவத்திற்கு புதிய தளவாடங்கள் கொள்முதல் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதில் மத்திய அரசின் திட்டமான ஆத்மநிர்பர் திட்டத்தின் கீழ் முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தளவாடங்கள் கொள்முதல் செய்யப்படும். மேலும் இவை முற்றிலும் உள் நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு உற்பத்தி செய்யப்படும்.

இந்த ஒப்புதல்களில் இந்திய விமானப்படைக்கு 12 சுகோய் - 30 ரக போர் விமானங்களை ரூ. 11 ஆயிரம் கோடிக்கு வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இந்த ரக விமானங்கள் ரஷ்யாவை சேர்ந்தவை ஆகும். இவை பெங்களூருவில் உள்ள பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தில் தயாரிக்கப்படும். இதில் 50 சதவீத பாகங்கள் உள் நாட்டிலேயே தயாரிக்கப்பட்டவை ஆகும்.

மேலும் இந்திய ராணுவத்திற்கு பலதரப்பட்ட கவச வாகனங்கள்,கண்காணிக்கும் மற்றும் குண்டு வீசும் திறன் கொண்ட ட்ரோன்கள்,ராணுவ டிரக்குகள், பீரங்கிகளை இழுத்து செல்லும் வாகனங்கள் போன்றவை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதை போன்றே கடற்படைக்கு அடுத்த தலைமுறையை சேர்ந்த ஆய்வு கப்பல்களை வாங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கப்பல்கள் கடலுக்கு அடியில் உள்ள தரை பகுதிகளை ஆய்வு செய்து அவற்றின் வரை படங்களை துல்லியமாக உருவாக்கி காண்பிக்கும்.

மேலும் விமானப்படைக்கு உள் நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட எம்.கே - 4 ஹெலிகாப்டர்களுக்கு தேவையான துருவஸ்திரா ஏவுகணைகளும் கொள்முதல் செய்ய முடிவு. மேலும் டோர்னியர் ரக விமானங்களில் எலெக்ட்ரானிக் கருவிகளை மேம்மபடுத்தவும் ஒப்புதல் செய்யப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்