பாதுகாப்புப் படையினரால் இதுவரை 40 "பயங்கரவாதிகள்" கொல்லப்பட்டுள்ளனர்: மணிப்பூர் முதல்-மந்திரி தகவல்
பாதுகாப்புப் படையினரால் இதுவரை 40 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக மணிப்பூர் முதல்-மந்திரி பிரேன் சிங் தெரிவித்துள்ளார்.;
இம்பால்,
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் மெய்தெய் என்ற மெஜாரிட்டி சமூகத்தினர் வசித்து வருகின்றனர். அவர்கள் தங்களை பழங்குடியினத்தில் சேர்க்க வேண்டும் என அரசிடம் கோரிக்கை விடுத்தனர். இதற்கு குகி என்ற பழங்குடி பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 3-ந்தேதி இரு தரப்பினர் நடத்திய ஊர்வலம், வன்முறையாக மாறி கலவரம் வெடித்தது. கலவரம் பல்வேறு மாவட்டங்களுக்கும் பரவி, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
வாகனங்கள், வீடுகள், பள்ளி கூடங்கள், கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் வணிக வளாகங்கள் உள்ளிட்டவற்றை ஆர்ப்பாட்டக்காரர்கள் அடித்து நொறுக்கியும், தீ வைத்து கொளுத்தியும் உள்ளனர். நிலைமை அத்துமீறி சென்ற நிலையில், வன்முறை பரவாமல் தடுக்கும் நோக்கில், 5 நாட்களுக்கு மணிப்பூரில் இணைய தள சேவை துண்டிக்கப்பட்டது. மேலும், வன்முறையை கட்டுப்படுத்த 8 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவையும் அரசு அமல்படுத்தியது. கலவரக்காரர்களை கண்டதும் சுடவும் உத்தரவிடப்பட்டது. அதிரடி விரைவு படையினரும், ராணுவம் மற்றும் துணை ராணுவம் படையினரும் கூடுதல் பாதுகாப்பிற்காக மணிப்பூரின் பல பகுதிகளிலும் குவிக்கப்பட்டனர்.
ஆயுதமேந்திய வீரர்களின் உதவியுடன், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும், ரோந்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. மணிப்பூர் வன்முறையில் இந்திய ராணுவம் மற்றும் அசாம் ஆயுத படை உதவியுடன் ஆயிரக்கணக்கான மக்கள் மீட்கப்பட்டனர். கலவரத்திற்கு அப்பாவி பொதுமக்கள் 60-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். 230-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 1,700 வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டு உள்ளன என மணிப்பூர் முதல்-மந்திரி மே மாத முதல் வாரத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது கூறி இருந்தார்.
இந்நிலையில் வன்முறை சம்பவங்கள் மற்றும் பொதுமக்கள் மீதான தாக்குதல்களைத் தடுக்கும் நடவடிக்கைகளின் போது பாதுகாப்புப் படையினரால் இதுவரை 40 "பயங்கரவாதிகள்" கொல்லப்பட்டுள்ளதாக மணிப்பூர் முதல்-மந்திரி பிரேன் சிங் தெரிவித்துள்ளார். மேலும் மாநிலத்தில் அமைதியை மீட்டெடுக்க நாங்கள் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதுவரை 40 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக எங்களிடம் தகவல்கள் உள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டே மணிப்பூருக்கு சென்றுள்ள நிலையில், நேற்றிரவு முதல் காங்போக்பி, சுராசந்த்பூர் மற்றும் பிஷ்னுப்பூர் மாவட்டங்கள் உள்பட பல பகுதிகளில் துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன.