சொத்து குவிப்பு வழக்கில் சுங்கத்துறை அதிகாரிக்கு 4 ஆண்டு சிறை-சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு

சொத்து குவிப்பு வழக்கில் சுங்கத்துறை அதிகாரிக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.

Update: 2023-10-07 18:45 GMT

பெங்களூரு:-

சுங்கத்துறை அதிகாரி

பெங்களூருவை சேர்ந்தவர் முகமது சபியுல்லா. இவர் பெங்களூரு புறநகர் பகுதியில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரியாக இருந்து வருகிறார். அவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. மேலும் கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் 1-ந் தேதி அவரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். மேலும் அன்றைய நாளில், அவரது வீட்டில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் வராத தங்க, வைர நகைகள், சொத்து ஆவணங்கள் இருந்தன.

மேலும் அவரது மனைவி பெயரில் சொத்துக்கள் வாங்கப்பட்டதற்கான ஆவணங்களும் சிக்கின. சோதனையின்போது அவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை வாங்கியது உறுதியானது. இதையடுத்து முகமது சபியுல்லா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கு விசாரணை பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் அவரது மனைவி அஸ்ரா சாபி இரண்டாவது குற்றவாளியாக சேர்க்கப் பட்டுள்ளார்.

4 ஆண்டு சிறை

இந்த நிலையில் சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் சிறப்பு கோர்ட்டு நீதிபதி தீர்ப்பு வழங்கினார். அப்போது முகமது சபியுல்லா மீதான குற்றச்சாட்டு ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

மேலும் அவருக்கு சொந்தமான ரூ.8¼ லட்சம் சொத்துக்களை பறிமுதல் செய்ய சி.பி.ஐ.க்கு நீதிபதி உத்தரவிட்டார். முகமது சபியுல்லாவின் மனைவி மீதான குற்றம் நிரூபிக்கப்படாததால், அவரை இந்த வழக்கில் இருந்து நீதிபதி விடுவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்