திரிணாமுல் காங்கிரசின் 38 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வுடன் தொடர்பு; நடிகர் மிதுன் சக்ரவர்த்தி பரபரப்பு பேச்சு

திரிணாமுல் காங்கிரசின் 38 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வுடன் தொடர்பில் உள்ளனர் என நடிகர் மற்றும் அக்கட்சி உறுப்பினரான மிதுன் சக்ரவர்த்தி இன்று கூறியுள்ளார்.

Update: 2022-07-27 13:57 GMT



கொல்கத்தா,



திரிணாமுல் காங்கிரசின் முன்னாள் உறுப்பினரான நடிகர் மிதுன் சக்ரவர்த்தி, அக்கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் தன்னை இணைத்து கொண்டார். 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.வின் தேர்தல் பிரசாரத்தில் நட்சத்திர பேச்சாளர்களில் ஒருவராக இருந்தவர்.

எனினும், அந்த தேர்தலில் 213 தொகுதிகளை திரிணாமுல் காங்கிரஸ் கைப்பற்றியது. அக்கட்சி ஆட்சியும் அமைத்துள்ளது. பா.ஜ.க. 77 இடங்களில் வெற்றி பெற்றது. இதன்பின்பு, நடிகர் மிதுன் சக்ரவர்த்தி தற்போது வரை பொது இடங்களில் தன்னை வெளிப்படுத்தி கொள்ளாமல் இருந்து வருகிறார்.

இந்த சூழலில், அவர் இன்று செய்தியாளர்களிடம் பேசும்போது, நீங்கள் பிரேகிங் செய்தி கேட்க ஆவலாக இருக்கிறீர்களா? இந்த தருணம் வரை, திரிணாமுல் காங்கிரசின் 38 எம்.எல்.ஏ.க்கள் எங்களுடன் (பா.ஜ.க.வுடன்) நல்ல தொடர்பில் உள்ளனர். அவர்களில் 21 பேர் நேரடியாகவே எங்களுடன் தொடர்பில் இருக்கிறார்கள் என கூறியுள்ளார். இதனால், மேற்கு வங்காள அரசியலில் சலசலப்பு ஏற்பட்டு உள்ளது.

மேற்கு வங்காளத்தின் வணிகம் மற்றும் தொழில்துறை மந்திரியாக உள்ள பார்த்தா சாட்டர்ஜி, கடந்த 2014 முதல் 2021-ம் ஆண்டு வரை மாநில கல்வித்துறை மந்திரியாக செயல்பட்டபோது, ஆசிரியர்கள் பணி நியமனத்தில் ஊழல் நடைபெற்றிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது குறித்து விசாரிக்க சி.பி.ஐ. அமைப்புக்கு கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த விவகாரத்தில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்துள்ளது என குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இது குறித்து அமலாக்கத்துறை தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. அந்த வகையில், கொல்கத்தா நாக்தலா பகுதியில் உள்ள மந்திரி பார்த்தாவின் வீட்டில் கடந்த 22-ம் தேதி தொடங்கி தொடர்ந்து 27 மணி நேரம் அமலாக்க துறையினர் சோதனை நடத்தினர். பார்த்தாவின் உதவியாளரான அர்பிதா முகர்ஜி வீட்டிலும் சோதனை நடைபெற்றது.

இந்த சோதனையில் அர்பிதாவின் வீட்டில் இருந்து ரூ.20 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பணம் ஆசிரியர் நியமன முறைகேட்டுடன் தொடர்புடையது என தகவல் வெளியானது. இதனை தொடர்ந்து மந்திரி பார்த்தா சாட்டர்ஜியை அமலாக்க துறையினர் கடந்த 23-ம் தேதி மாலை கைது செய்தனர். மந்திரியின் உதவியாளர் அர்பிதா முகர்ஜியும் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில், மேற்கு வங்காளத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கலந்து கொண்டு இன்று பேசும்போது, அவர்களுக்கு (பா.ஜ.க.) வேலையே கிடையாது. 3 முதல் 4 அமைப்புகளை வைத்து கொண்டு மாநில அரசாங்கங்களை தங்கள் வசம் எடுத்து கொள்வதே அவர்களது வேலை.

அவர்கள் மராட்டிய மாநிலத்தினை எடுத்து கொண்டார்கள். தற்போது ஜார்க்கண்ட் மாநிலம். ஆனால், வங்காளம் அவர்களை தோற்கடித்து விட்டது. வங்காளம் உங்களுக்கு வசப்படுவது அவ்வளவு எளிதல்ல. அதற்கு முதலில் நீங்கள், ராயல் வங்காள புலியுடன் மோத வேண்டும்.

2024ம் ஆண்டு பா.ஜ.க. ஆட்சிக்கு வரவே வராது என்பது எனது நம்பிக்கை. இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 40% அதிகரித்து உள்ளது. ஆனால், வங்காளத்தில் அது 45% குறைந்துள்ளது. தற்போது, ஊடகங்கள் வழியே ஒருவரின் மதிப்பை சீர்குலைக்கும் வேலைகள் நடந்து வருகின்றன. மக்களை குற்றவாளிகள் என கூறி வருகின்றனர். வங்காளம் மோசமடைந்து உள்ளது என்ற தோற்றத்தினை ஏற்படுத்த அவர்கள் விரும்புகிறார்கள் என்று கூறியுள்ளார்.

இதற்கு பதிலடி தரும் வகையில், திரிணாமுல் காங்கிரசின் 38 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வுடன் தொடர்பில் உள்ளனர் என நடிகர் மற்றும் அக்கட்சி உறுப்பினரான மிதுன் சக்ரவர்த்தி இன்று கூறியுள்ளார். இதனால், மராட்டியத்தில் ஷிண்டே அணி சிவசேனாவில் இருந்து தனியாக பிரிந்து, தற்போது பா.ஜ.க. கூட்டணியுடன் ஆட்சி நடந்து வருவது போன்ற சூழல் ஏற்படலாம் என கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்