வாக்குச்சாவடி விவரங்களை வாக்காளர்கள் அறிந்துகொள்ள 3 வழிமுறைகள்

கர்நாடக சட்டசபை தேர்தலில் வாக்குச்சாவடி விவரங்களை வாக்காளர்கள் அறிந்துகொள்ள 3 வழிமுறைகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது.

Update: 2023-05-08 22:42 GMT

பெங்களூரு,

3 வழிமுறைகள்

கர்நாடக சட்டசபை தேர்தல் நாளை (புதன்கிழமை) நடக்கிறது. இந்த தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்க தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் வாக்காளர்களுக்கு பல்வேறு வசதிகளையும் தேர்தல் ஆணையம் செய்து கொடுத்துள்ளது. இதுதொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ேதர்தல் நெருங்கிவிட்டதால், வாக்காளர்கள் தாங்கள் எந்த வாக்குச்சாவடியில் சென்று வாக்களிப்பது? வாக்குச்சாவடியில் எவ்வளவு கூட்டம் உள்ளது? வாகன நிறுத்த வசதி எங்கு உள்ளது? வீல் சேரை முன்பதிவு செய்வது? வேட்பாளர்கள் விவரம்? உள்ளிட்ட விவரங்களை 3 வழிகளில் பெற தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதாவது, செல்போன் செயலி, இணையதளம், இலவச எண் மூலம் அறிந்துகொள்ளும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

'சுனாவனா' செல்போன் செயலி

'சுனாவனா' என்ற செயலியை செல்போனில் பதிவிறக்கம் செய்து, தங்கள் சுய விவரங்களை கொடுக்க வேண்டும். பின்னர் தங்களின் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை உள்ளீடு செய்து, தங்கள் வாக்குச்சாவடி எங்கு உள்ளது, அங்கு எவ்வளவு கூட்டம் உள்ளது உள்ளிட்ட விவரங்களை தெரிந்துகொள்ளலாம். மேலும் ஜி.பி.எஸ். மூலமும் அருகில் உள்ள வாக்குச்சாவடி விவரத்தை அறிந்துகொள்ளலாம்.

2-வதாக www.kgis.ksrsac.in என்ற இணையதளம் மூலம் வாக்குச்சாவடி விவரங்களை தெரிந்துகொள்ளலாம். செல்போன் செயலி மற்றும் இணையதளம் மூலம் வாக்குச்சாவடி குறித்த தகவல்களை பெற முடியாதவர்கள், 1950 அல்லது 180042 551950 என்ற இலவச எண்ணை தொடர்புகொண்டு வாக்குச்சாவடி விவரங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு தேர்தலிலும் கிராமப்புறங்களை விட நகர்புறங்களில் குறைவான வாக்குகள் பதிவாகிறது. இதனால் செல்போன் செயலி, இணையதளம் போன்ற வசதிகளால் நகர்புறங்களில் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரிக்கும் என தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வாக்காளர் அடையாள அட்டை இல்லாமல் ஓட்டு அளிக்கலாமா?

தேர்தலின்போது பயன்படுத்தப்படும் முக்கிய ஆவணம் வாக்காளர் அடையாள அட்டை. வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்து வாக்காளர் அடையாள அட்டை இல்லை என்றாலும் பரவாயில்லை அவர்கள் வாக்காளிக்கலாம். அதாவது, வாக்காளர் அடையாள அட்டை இல்லை என்றாலும், பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், புகைப்படத்துடன் கூடிய வங்கி கணக்கு புத்தகம், அரசு ஊழியர் அடையாள அட்டை, தொழிலாளர் துறை சுகாதார காப்பீட்டு அட்டை, ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை காண்பித்து வாக்களிக்கலாம்.

Tags:    

மேலும் செய்திகள்