தனியார் பள்ளிகளில் திருடிய தமிழகத்தை சேர்ந்த 3 பேர் கைது

பெங்களூரு உள்பட பல்வேறு இடங்களில் தனியார் பள்ளிகளில் புகுந்து திருட்டில் ஈடுபட்ட தமிழகத்தை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2023-02-27 20:37 GMT

ஞானபாரதி:

தமிழகத்தை சேர்ந்தவர்கள்

பெங்களூரு ஞானபாரதி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தனியார் பள்ளி உள்ளது. அந்த பள்ளியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்மநபர்கள் உள்ளே புகுந்தனர். அவர்கள் அங்கிருந்த பணம் மற்றும் மடிக்கணினி உள்ளிட்ட பொருட்களை திருடிவிட்டு தப்பி சென்றனர். இதுகுறித்து பள்ளி நிர்வாகம் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையின்பேரில் போலீசார் 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் தமிழகம் சேலத்தை சேர்ந்த அண்ணாதுரை, வீரமலை, பாபு என்கிற காந்தி ஆகிய 3 பேர் என்பது தெரிந்தது.

12 வழக்குகளில் தீர்வு

இதுகுறித்து பெங்களூரு துணை போலீஸ் கமிஷனர் லட்சுமண் நிம்பரகி நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-

பெங்களூரு ஞானபாரதி பகுதியில் பள்ளிக்குள் புகுந்து மடிக்கணினி உள்ளிட்டவற்றை திருடியவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. விசாரணையில் அவர்கள் இதேபோல் உளிமாவு, பிரேசர் டவுன் கோலார், தாவணகெரே உள்ளிட்ட பகுதிகளில் பள்ளிகளுக்குள் புகுந்து திருட்டில் ஈடுபட்டு வந்ததும், கடந்த 2001-ம் ஆண்டு முதல் அவர்கள் இதுபோன்ற திருட்டு செயல்களில் ஈடுபட்டதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இவர்கள் மீது பெங்களூருவில் 12 வழக்குகள் பதிவாகி இருந்தது. தற்போது அந்த வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது..

ரூ.5 லட்சம் பொருட்கள் மீட்பு

அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் அவர்களிடம் இருந்து ரூ.5 லட்சம் மதிப்பிலான மடிக்கணினி, செல்போன்கள் மற்றும் ரொக்கப்பணம் ஆகியவை மீட்டனர்.

ஆண்டுதோறும் ஜூன் மாதங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு, மாணவர்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கப்படும் என்பதால், அந்த சமயத்தில் பள்ளிகளில் அதிகளவும் பணம் இருக்கும் என அறிந்து அவர்கள் திருட்டில் ஈடுபட்டது அம்பலமாகி உள்ளது. அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்