வாக்குச்சாவடிகளை கண்காணிக்க 2,910 குழுக்கள் அமைப்பு

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி வாக்குச்சாவடிகளை கண்காணிக்க 2,910 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

Update: 2023-05-08 22:51 GMT

பெங்களூரு:-

1.56 லட்சம் போலீஸ் பாதுகாப்பு

கர்நாடக சட்டசபைக்கு நாளை (புதன்கிழமை) காலை 7 மணியில் இருந்து மாலை 6 மணிவரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான பகிரங்க பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. சட்டசபை தேர்தலை எந்த விதமான அசம்பாவிதங்கள் இல்லாமலும், அமைதியான முறையில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையமும், போலீசாரும் செய்து வருகிறார்கள்.

இதையடுத்து, நாளை நடைபெறும் சட்டசபை தேர்தலையொட்டி பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் ஒட்டு மொத்தமாக 1 லட்சத்து 56 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். அதன்படி, 304 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 991 இன்ஸ்பெக்டர்கள், 2,610 சப்-இன்ஸ்பெக்டர்கள், 5,803 உதவி சப்-இன்ஸ்பெக்டர்கள், 46 ஆயிரத்து 421 போலீஸ்காரர்கள், 27 ஆயிரத்து 990 ஊர்க்காவல் படையினர் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் என 84 ஆயிரத்து 119 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

650 கம்பெனி மத்திய படைவீரர்கள்

இதுதவிர சட்டசபை தேர்தல் பாதுகாப்புக்காக அண்டை மாநிலங்களில் இருந்து போலீசார் வரவழைக்கப்பட்டு இருக்கிறார்கள். அதன்படி, வெளி மாநிலங்களில் இருந்து நேற்று வரை 8,500 போலீசார் பெங்களூரு உள்பட கர்நாடகத்தின் பல மாவட்டங்களில் முகாமிட்டுள்ளனர். தேவைப்படும் பட்சத்தில் இன்றும் (செவ்வாய்க்கிழமை) வெளிமாநிலங்களில் இருந்து போலீசார் வர உள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எல்லாவற்றுக்கும் மேலாக சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்தே மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் கர்நாடகத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர். துணை ராணுவ படை வீரர்கள், அதிரடி படை வீரர்கள், எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் என ஒட்டு மொத்தமாக 650 கம்பெனி மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் சட்டசபை தேர்தலின் போது மாநிலம் முழுவதும் நாளை பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

பதற்றமான வாக்குச்சாவடிகள்

இவற்றில் பெங்களூருவில் மட்டும் 49 கம்பெனி மத்திய பாதுகாப்பு படைவீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். ஒட்டு மொத்தமாக 1 லட்சத்து 56 ஆயிரம் போலீசார் நாளை பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். மாநிலத்தில் ஒட்டு மொத்தமாக 58 ஆயிரத்து 282 வாக்குச்சாவடிகள் உள்ளன. அவற்றில் 11 ஆயிரத்து 617 வாக்குச்சாவடிகள் பதற்றமானது என்று கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

 அதே நேரத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகளை தீவிரமாக கண்காணிக்கும்படி போலீசாருக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் மத்திய பாதுகாப்பு படைவீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மாநிலம் முழுவதும் 2,910 குழுக்கள் அமைக்கப்பட்டு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். அதாவது ஒவ்வொரு குழுவும் 20 வாக்குச்சாவடிகளில் கண்காணிக்க உள்ளனர்.

கடும் நடவடிக்கை

ஒவ்வொரு குழுவிலும் ஒரு இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் பதவியிலான அதிகாரிகள் மற்றும் போலீசார் இடம் பெற்றிருப்பார்கள். ஏற்கனவே ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பெங்களூரு மட்டுமின்றி ஒவ்வொரு மாவட்டத்திலும் ரவுடிகள் முன் எச்சரிக்கையாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

கர்நாடக சட்டசபை தேர்தலை அமைதியான முறையில் நடத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், அமைதியை சீர்குலைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநில போலீஸ் டி.ஜி.பி. பிரவீன் சூட் எச்சரித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்