பெங்களூருவில் 4-வது நாளில் ராஜகால்வாய்களை ஆக்கிரமித்த 29 கட்டிடங்கள் இடித்து அகற்றம்
பெங்களூருவில் 4-வது நாளாக தொடர்ந்து ராஜகால்வாய்களை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 29 கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டது.;
பெங்களூரு:
4-வது நாளாக இடித்து அகற்றம்
பெங்களூருவில் ராஜகால்வாய்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை மாநகராட்சி இடித்து அகற்றி வருகிறது. பெங்களூருவில் மழை பாதிப்பால் பெரிதும் பாதிக்கப்பட்ட மகாதேவபுரா, பொம்மனஹள்ளி மண்டலங்களில் தான் கடந்த 3 நாட்களாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வந்தது. இந்த நிலையில், பெங்களூருவில் நேற்று 4-வது நாளாக ராஜகால்வாய்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த கட்டிடங்கள், காம்பவுண்டு சுவர்கள், குடியிருப்பு வீடுகளை பொக்லைன் எந்திரங்கள் மூலமாக மாநகராட்சி அதிகாரிகள் இடித்து அகற்றினார்கள்.
அதன்படி, மாநகராட்சியின் தாசரஹள்ளி, எலகங்கா, பொம்மனஹள்ளி மற்றும் மகாதேவபுரா ஆகிய 4 மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள ராஜகால்வாய் ஆக்கிரமிப்புகள் இடித்து அகற்றப்பட்டது. தாசரஹள்ளியில் மண்டலத்தில் நெலகதரஹள்ளி ரோடு, ருக்மணி நகரில் ராஜகால்வாய்கள் ஆக்கிரமிப்பு இடித்து அகற்றப்பட்டு இருந்தது.
அடுக்குமாடி குடியிருப்பின் காம்பவுண்டு....
எலகங்கா மண்டலத்தில் குவெம்பு நகர் வார்டில் சிங்காபுரா லே-அவுட் அருகே உள்ள ராஜகால்வாய் நிலத்தை ஆக்கிரமித்து லேண்ட் மார்க் என்ற அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு இருந்தது. அதாவது 2½ அடி அகலம் மற்றும் 75 மீட்டர் நீளத்தில் கால்வாயை ஆக்கிரமித்து அடுக்குமாடியை சுற்றி காம்பவுண்டு சுவர் கட்டப்பட்டு இருந்தது. அந்த காம்பவுண்டு சுவர் இடித்து அகற்றப்பட்டது. இதுபோல், சிங்காபுரா ஏரி நிலத்தை ஆக்கிரமித்து லே-அவுட் அமைக்கப்பட்டு இருந்தது. அந்த லே-அவுட் உள்ள கட்டிடங்களை இடித்து அகற்றப்பட்டது.
ஒட்டு மொத்தமாக நேற்று ஒரேநாளில் 4மண்டலங்களில் ராஜகால்வாய்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த 29 கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டு இருப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்கள் குற்றச்சாட்டு
பெங்களூருவில் 4 நாட்களாக நடைபெற்று வரும் ஆக்கிரமிப்புகள்அகற்றும் பணிகளின் போது பெரும்பாலும் வீடுகளுக்கு முன்பாக இருக்கும் காம்பவுண்டு சுவர்கள், முன்பக்க சுவர்கள், காலிநிலத்தில் கட்டப்பட்டு இருக்கும் ஷெட் வீடுகள் மட்டுமே அகற்றப்பட்டு இருக்கிறது. ஆனால் கால்வாய் மற்றும் ஏரிகளை ஆக்கிரமித்து கட்டியுள்ள வீடுகளோ, பெரிய கட்டிடங்களோ இடித்து அகற்றப்படவில்லை. வீடுகளுக்கு முன்பாக இருக்கும் காம்பவுண்டு சுவர்கள், சில பகுதிகளை இடிக்க மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து மாநகராட்சி ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்து வருகிறார்கள்.
போலீசாரின் உதவியுடனே 4 நாட்களும் ஆக்கிரமிப்புகள் இடித்து அகற்றப்பட்டுள்ளது. இதற்கிடையில், சாதாரண மக்களின் வீடுகளின் சுவர்கள் தான் இடிக்கப்படுவதாகவும், வசதிப்படைத்தவர்கள் ஏரி, கால்வாய்களை முழுமையாக ஆக்கிரமித்து அடுக்குமாடி வீடுகள், கட்டிடங்கள் கட்டி இருந்தாலும், அதனை இடிக்க மாநகராட்சி முன்வரவில்லை என்றும் மாநகராட்சி மீது பொதுமக்கள் தொடர்ந்து குற்றச்சாட்டு கூறிவருகிறார்கள்.