கர்நாடகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 283 காட்டு யானைகள் உயிரிழப்பு

நாட்டிலேயே அதிக யானைகள் கொண்ட மாநிலமாக கர்நாடக மாநிலம் திகழ்ந்து வருகிறது.

Update: 2024-07-26 23:57 GMT

பெங்களூரு,

கர்நாடகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 283 யானைகள் உயிர் இழந்திருப்பது தெரியவந்துள்ளது. இந்த ஆண்டு மட்டும் 6 யானைகள் வேட்டையாடி கொல்லப்பட்டதாக வழக்குகள் பதிவாகி உள்ளது.

நாட்டிலேயே அதிக யானைகள் கொண்ட மாநிலமாக கர்நாடக மாநிலம் திகழ்ந்து வருகிறது. அதன்படி, கர்நாடகத்தில் 6ஆயிரத்து 395 யானைகள் இருப்பது கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. யானைகளின் அதிகரிப்பை போன்று, அதன் உயிர் இழப்பும் தொடர்ந்து அதிகரித்து வருவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, கர்நாடகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 283 யானைககள் உயிர் இழந்திருப்பது தெரியவந்துள்ளது. கடந்த 2021-22-ம் ஆணடில் 82 யானைகளும், 2022-23-ம் ஆண்டில் 72 யானைகளும், 2023-24-ம் ஆண்டில் 94 யானைகளும், 2024-25-ம் ஆண்டில் (ஜூலை வரை) 35 யானைகளும் உயிர் இழந்திருப்பது வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.

பெரும்பாலான யானைகள் வயதான காரணத்தாலும், அதற்கு அடுத்தபடியாக உடல் நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாகவும் உயிர் இழந்திருக்கின்றன. இதுதவிர யானைகள் உயிர் இழப்புக்கு முக்கிய காரணமாக மின்சாரம் தாக்கி பலியாகி இருப்பது தெரியவந்துள்ளது. கர்நாடகத்தில் கடந்த ஒரு ஆண்டில் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 17 யானைகள் உயிர் இழந்துள்ளன.

கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 6 யானைகள் வேட்டையாடி கொல்லப்பட்டுள்ளது. அதுகுறித்து வனத்துறையினர் தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தங்களுக்காக யானைகள் கொல்லப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்