பா.ஜ.க.வுடன் தொடர்புடைய 25 ஆயிரம் சட்டவிரோத கட்டிடங்கள்; புல்டோசரில் எரிபொருள் இல்லையா? அகிலேஷ் கேள்வி
பா.ஜ.க. ஆட்சியில் வி.வி.ஐ.பி. தொகுதியான வாரணாசியில் 25 ஆயிரம் சட்டவிரோத கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளன என அகிலேஷ் யாதவ் தெரிவித்து உள்ளார்.
லக்னோ,
உத்தர பிரதேச முன்னாள் முதல்-மந்திரி மற்றும் சமாஜ்வாடி கட்சியின் தலைவரான அகிலேஷ் யாதவ் டுவிட்டரில் இன்று வெளியிட்டு உள்ள செய்தியில், பா.ஜ.க. ஆட்சியில் வி.வி.ஐ.பி. தொகுதியான வாரணாசியில் 25 ஆயிரம் சட்டவிரோத கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளன.
அவற்றுடன் பா.ஜ.க.வின் ஆதரவாளர்கள் பலருக்கு தொடர்பு உள்ளது என தெரிவித்து உள்ளார். இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளபோது, குறைந்தது கட்டாயத்தின் பேரிலாவது பா.ஜ.க.வினருக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள். அல்லது புல்டோசரில் எரிபொருள் இல்லையா? என அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
தொழிலதிபரிடம் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவர் லஞ்சம் கேட்கும் வீடியோ ஒன்றை டுவிட்டரில் நேற்று அகிலேஷ் வெளியிட்டு, அந்த அதிகாரிக்கு எதிராக புல்டோசர் நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று உத்தர பிரதேச முதல்-மந்திரி ஆதித்யநாத்தின் அரசை தாக்கும் வகையில் கேள்வி எழுப்பினார்.
குற்றங்களுக்கு எதிரான பா.ஜ.க.வின் பூஜ்ய சகிப்பின்மையின் உண்மை தன்மையை மக்கள் பார்த்து கொண்டிருக்கின்றனர் என்றும் அவர் பதிவிட்டார்.
இதற்கு பதிலளித்த மீரட் போலீசார், 2 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான பழைய வீடியோ அது. மீரட்டுடன் எந்தவித தொடர்பும் இல்லை என தெரிவித்தனர். மீரட் மாவட்டத்தில் சிங் பதவியில் இருந்தபோது உள்ள வீடியோ அது. அந்த விவகாரத்தில் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டு விட்டது என பதிலளித்தனர்.