எழுத்தாளர்களுக்கு 24 மணிநேரமும் போலீஸ் பாதுகாப்பு-மந்திரி பரமேஸ்வர் பேட்டி

கொலை மிரட்டல் வந்துள்ளதால் எழுத்தாளர்களுக்கு 24 மணிநேரமும் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என்று மந்திரி பரமேஸ்வர் தெரிவித்துள்ளார்.

Update: 2023-08-23 18:45 GMT

பெங்களூரு:-

பெங்களூருவில் போலீஸ் மந்திரி பரமேஸ்வர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

எழுத்தாளர்களுடன் ஆலோசனை

கர்நாடகத்தில் உள்ள எழுத்தாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து கடிதம் வந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக விதானசவுதாவில் அனைத்து எழுத்தாளர்களுடன் ஆலோசனை நடத்தினேன். அவர்களது கோரிக்கை, பாதுகாப்பு குறித்தும் கேட்டு அறிந்து கொண்டேன். கொலை மிரட்டல் எந்த ரூபத்தில் வந்துள்ளது உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் எழுத்தாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எழுத்தாளர்களுக்கு என்று ஒவ்வொரு கொள்கைகள் இருக்கும். அவர்கள் தங்களது கொள்கையின்படி தங்களது கருத்துகளை எழுத்து மூலமாக வெளிப்படுத்துவார்கள். இதற்கு எழுத்தாளர்களை நேரிடையாகவே வசைபாடுவது உண்டும். இன்னும் சிலர் இதுபோன்று கொலை மிரட்டல் விடுப்பதும் உண்டு. ஆனால் எழுத்தாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுப்பதை ஏற்று கொள்ள முடியாது.

போலீஸ் பாதுகாப்பு

இதற்கு முன்பு எம்.எம்.கலபுரகி, கவுரி லங்கேஷ் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டு இருந்தார்கள். எனவே எழுத்தாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட விவகாரத்தை அரசும், போலீசாரும் தீவிரமாக எடுத்துள்ளது. அதனால் எழுத்தாளர்களுக்கு 24 மணிநேரமும் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும். இதற்காக கன்மேன் (பாதுகாவலர்) எழுத்தாளர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிப்பார்கள்.

எழுத்தாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர்களை பிடிக்க உயர் போலீஸ் அதிகாரிகள் தலைமையில் தனியாக விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தனியாக விசாரணை நடந்து வருகிறது. கொலை மிரட்டல் விடுத்த மர்மநபர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு தகுந்த தண்டனை பெற்றுக் கொடுக்கப்படும்.

இவ்வாறு பரமேஸ்வர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்