ஏப்ரல் மாதம் உச்சம் தொட்ட விலைவாசி உயர்வு; மொத்தவிலை பணவீக்கம் 15.08 சதவீதமாக உயர்வு!
ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் மொத்த பணவீக்கம் 15.08 சதவீதமாக உயர்ந்துள்ளது.
புதுடெல்லி,
ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் மொத்தப் பணவீக்கம் 15.08 சதவீதமாக உயர்ந்துள்ளது என தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை (டிபிஐஐடி) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உணவுப் பொருட்கள் முதல் வர்த்தகப் பொருட்கள் வரையில் இந்தியா முழுவதும் அனைத்து பிரிவுகளிலும் ஏற்பட்ட விலை உயர்வு காரணமாக, ஏப்ரல் மாதத்தில் மொத்த விலை அடிப்படையிலான பணவீக்கம் 15.08 சதவீதமாக உயர்ந்துள்ளது.
மொத்தவிலை அடிப்படையிலான பணவீக்கம் மார்ச் மாதத்தில் 14.55 சதவீதமாகவும், கடந்த ஆண்டு இதே ஏப்ரல் மாதத்தில் 10.74 சதவீதமாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
2021ஆம் ஆண்டு ஏப்ரல் முதல், தொடர்ந்து 13வது மாதமாக மொத்தவிலை பணவீக்கம் இரட்டை இலக்கத்தில் உள்ளது. இந்நிலையில் ஏப்ரல் மாதத்தில் மொத்த விலை அடிப்படையிலான பணவீக்கம் 15.08 சதவீதமாக உயர்ந்தது சாமானிய மக்கள் முதல் உற்பத்தி நிறுவனங்கள் வரையில் அனைத்து தரப்பினரையும் கடுமையாகப் பாதித்துள்ளது.
எரிபொருள் மற்றும் மின்சாரம் பிரிவின் பணவீக்கம் 38.66 சதவீதமாகவும், உற்பத்தி பொருட்களின் பணவீக்கம் 10.85 சதவீதமாகவும், எண்ணெய் வித்துக்கள் பணவீக்கம் 16.10 சதவீதமாக உள்ளது. ஏப்ரல் மாதத்தில் உணவுப் பொருட்களின் பணவீக்கம் மட்டும் 8.35 சதவீதமாக இருந்தது.
கச்சா பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுவின் பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் 69.07 சதவீதமாக இருந்தது. இது தான் அனைத்து பொருட்களின் விலைவாசி உயர்வுக்கும் அடிப்படை மற்றும் முக்கியக் காரணமாக உள்ளது.
கடந்த வாரம் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தியாவின் சில்லறை பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் 7.79 சதவீதமாக உயர்ந்துள்ளது. தொடர்ந்து நான்காவது மாதமாக, ரிசர்வ் வங்கியின் பணவீக்க உச்ச இலக்கான 6 சதவீதத்தை விட அதிகமாக உள்ளது.
இந்தியாவில் தொடர்ந்து 4வது மாதமாக அதிகரித்து வரும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த, மே மாத தொடக்கத்தில் ரிசர்வ் வங்கி அதன் வட்டி விகிதத்தை 0.40 சதவீதமும், ரொக்க கையிருப்பு விகிதத்தை 0.50 சதவீதமும் உயர்த்தியது குறிப்பிடத்தக்கது. மேலும் அடுத்த இரண்டு நாணய கொள்கை கூட்டத்திலும் வட்டியை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.