டெல்லியில் தீவிர வெப்ப அலை; அதிகபட்ச வெப்பநிலை 50 டிகிரி செல்சியசை நெருங்கியது!

இன்று அதிகபட்ச வெப்பநிலை 49 டிகிரியை தாண்டியதால் டெல்லியில் கடுமையான வெப்ப அலை நிலவுகிறது.

Update: 2022-05-15 14:57 GMT
புதுடெல்லி,

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின்படி, இன்று அதிகபட்ச வெப்பநிலை 49 டிகிரியை தாண்டியதால் டெல்லியில் கடுமையான வெப்ப அலை நிலவுகிறது. இந்த கோடையில் தலைநகரில் ஏற்படும் ஐந்தாவது வெப்ப அலை இதுவாகும்.

வடமேற்கு டெல்லியின் முங்கேஷ்பூரில் அதிகபட்சமாக 49.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. டெல்லியின் தென்மேற்கு பகுதியில் உள்ள நஜாப்கரில் 49.1 டிகிரி செல்சியஸ் மற்றும் அண்டை நகரமான குர்கானில் 48.1 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. இந்த நகரத்தில் உச்சபட்சமாக மே 10, 1966 அன்று 49 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியிருந்தது.  மே 10, 1966க்கு பின், இன்று தான் அங்கு அதிகபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது. 
நேற்று, முங்கேஷ்பூர் மற்றும் நஜப்கர் நிலையங்களில் 47 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியிருந்த நிலையில் இன்று சற்று அதிகரித்து காணப்பட்டது. எனினும், இது மேலும் அதிகரிக்க வாய்ப்பில்லை என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் வளிமண்டல சுழற்சியால், அடுத்த இரண்டு நாட்களுக்கு கடுமையான வெப்பத்திலிருந்து சிறிது நிவாரணம் கிடைக்கும். நாளை டெல்லியை இடியுடன் கூடிய மழை அல்லது புழுதிப் புயல் தாக்கக்கூடும் என்று கணித்துள்ளது.

இன்று குறைந்தபட்சமாக, மயூர் விஹார் கண்காணிப்பகத்தில் 45.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. 

அனைத்து வானிலை நிலையங்களும் வெப்ப அலையை பதிவு செய்துள்ளன. அதாவது வெப்பநிலையானது,  இயல்பை விட குறைந்தபட்சம் 4.5 டிகிரி அதிகமாக இருந்தது. மேலும், வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸுக்கு மேல் பதிவாகி இருந்தது.

டெல்லியில் ஏப்ரல் மாதத்தில் சராசரியாக 12.2 மி.மீ மழை பெய்யும். ஆனால் இம்முறை 0.3 மி.மீ மழை மட்டுமே பெய்துள்ளது. இதனால் கடும் வெப்பம் வாட்டி வதைக்கிறது.

கடுமையான வெப்பம் காரணமாக ராஜஸ்தானுக்கு சிவப்பு எச்சரிக்கையும், நாளை மஞ்சள் எச்சரிக்கையும் பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம், கிழக்கு மத்தியப் பிரதேசம் மற்றும் டெல்லிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்