2 முறை பிரதமராக இருந்தது போதும்; பிரதமரிடம் கூறிய மூத்த எதிர்க்கட்சி தலைவர்

பிரதமர் மோடி, 2 முறை பிரதமராக இருந்தது போதும் என தன்னிடம் மூத்த எதிர்க்கட்சி தலைவர் ஒருவர் கூறினார் என தெரிவித்து உள்ளார்.

Update: 2022-05-13 03:38 GMT



புதுடெல்லி,



குஜராத்தின் பரூச் நகரில், அரசு சார்பில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் நல திட்டங்களை பெறும் பயனாளர்களுடன் காணொலி காட்சி வழியே பிரதமர் மோடி உரையாடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.  இதில், பிரதமர் மோடி பயனாளர்கள் பலரிடம் உரையாடினார்.

இந்நிகழ்ச்சியில் பல ஆச்சரியமளிக்கும் விசயங்கள் நடந்தன.  அவர் 3 மகள்களை கொண்ட, கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஒருவரிடம் பேசும்போது சற்று உணர்ச்சிவசப்பட்டார்.

இதேபோன்று, நாட்டில் பெண்களின் வாழ்க்கை முறையை எளிமைப்படுத்தியதற்காகவும், கண்ணியமுடன் நாட்டுக்கு பங்காற்றியதற்காகவும் பெண்களில் சிலர் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து கொண்டதுடன், பெரிய அளவை கொண்ட ராக்கி ஒன்றையும் அன்பு பரிசாக வழங்கினர்.

இதற்காக, அவர்களுக்கு நன்றி தெரிவித்து கொண்ட பிரதமர் மோடி, கடினமுடன் உழைக்க வேண்டும் என்று தனக்கு ஊக்கம் ஏற்படுத்தும் வகையிலான ஒரு கேடயம் போல் இது விளங்கும் என்று கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, ஒரு நாள் மூத்த எதிர்க்கட்சி தலைவர் என்னை சந்தித்து பேசினார்.  அரசியல் ரீதியாக எப்போதும் எங்களை எதிர்ப்பவர் அவர்.  ஆனால் அவர் மீது எனக்கு மதிப்பு உண்டு.  சில விசயங்களில் ஏற்பட்ட அதிருப்தியால் அவர் என்னை சந்திக்க வந்துள்ளார்.

அப்போது அவர் என்னிடம் கூறும்போது, நாடு உங்களை இரண்டு முறை பிரதமராக்கி விட்டது.  அதற்கு மேல் உங்களுக்கு தற்போது என்ன விருப்பம் உள்ளது? என கூறினார்.  அவரது கூற்றுப்படி, ஒருவர் இரண்டு முறை பிரதமராகி விட்டால், பின்பு அவர் எல்லாவற்றையும் சாதித்து விட்டார் என பொருள்போலும் என்று பிரதமர் கூறியுள்ளார்.

தொடர்ந்து அவர் கூறும்போது, ஆனால், அவர்களுக்கு குஜராத் மண் என்னை உருவாக்கியது என்று தெரியாது.  அதனாலேயே, நடந்தவை அனைத்தும் நடந்தவையாகவே இருந்து விட்டு போகட்டும் என்று என்னால் விட்டு விட முடியாது.  அதனை எளிதில் எடுத்து கொள்வதில் எனக்கு நம்பிக்கையும் கிடையாது.

நான் ஓய்வு எடுத்து கொள்ளபோவதும் இல்லை.  என்னுடைய கனவு, அரசு திட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதே என கூறியுள்ளார்.  அரசு நலத்திட்டங்கள் 100 சதவீதம் பயனாளர்களான பொதுமக்களுக்கு சென்று சேர வேண்டும் என்றும் அனைத்து திட்டங்களும் நிறைவேற வேண்டும் என்பதே தனது கனவு என்றும் அவர் கூறியுள்ளார்.

அவர் மூத்த தலைவர் என்று யாரை குறிப்பிட்டார் என அவரது பேச்சில் தெரிவிக்கப்படவில்லை.  எனினும், ஒரு மாதத்திற்கு முன் தேசியவாத காங்கிரசின் தலைவர் சரத் பவார் டெல்லியில் பிரதமரை நேரில் சந்தித்து பேசினார்.  சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் மற்றும் மராட்டிய முதல்-மந்திரியாக உள்ள அஜித் பவாரின் குடும்ப உறுப்பினர்களுக்கு எதிரான மத்திய அமைப்புகளின் நடவடிக்கை பற்றி பிரதமருடனான அந்த சந்திப்பில் அவர் பேசினார்.

மேலும் செய்திகள்