திருவிழாவில் உணவு வாங்க காசு கேட்ட 6 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்
மத்திய பிரதேசத்தில் தேர் திருவிழாவில் உணவு வாங்க காசு கேட்ட 6 வயது சிறுவனை போலீசார் அடித்து கொன்ற அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
ததியா,
மத்திய பிரதேசத்தின் ததியா மாவட்டத்தில் கோடை காலத்தில் தேர் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். இதில் கூட்டத்தில் கலவரம் ஏற்படாமல் இருக்க மற்றும் பக்தர்களின் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் ரவி சர்மா என்ற போலீஸ் கான்ஸ்டபிளும் பணியில் இருந்துள்ளார்.
திருவிழாவின்போது 6 வயது சிறுவன் ஒருவன் கான்ஸ்டபிளிடம் வந்து உணவு வாங்க காசு இல்லை என கூறி, பணம் கேட்டுள்ளான். அதற்கு பணம் தர ரவி மறுத்து, சிறுவனை விரட்டி விட்டார்.
ஆனால், அந்த வயதில் சிறுவனுக்கு பசியை தவிர வேறெதுவும் தெரியவில்லை. அதனால், மீண்டும் அதே கான்ஸ்டபிளிடம் வந்து பணம் கேட்டுள்ளான். இதில், ஆத்திரமடைந்த கான்ஸ்டபிள் ரவி சிறுவனை அடித்து உள்ளார். சிறுவனின் கழுத்து நெரிக்கப்பட்டதில் அவன் உயிரிழந்து விட்டான்.
இதனால், அடுத்து என்ன செய்வது என யோசித்த ரவி சிறுவனின் உடலை காரின் பின்புறம் போட்டு விட்டு குவாலியருக்கு திரும்பியுள்ளார். செல்லும் வழியில் சிறுவனின் உடலை ஆளில்லாத இடத்தில் வீசிவிட்டு சென்றுள்ளார்.
இதுபற்றிய விசாரணையில், சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் ரவி சர்மா காரில் அந்த வழியே சென்றது தெரிய வந்தது. அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், ததியா பகுதியில் தேர் திருவிழாவுக்கு சென்று விட்டு, 2 கான்ஸ்டபிள்களுடன் காரில் அந்த வழியே வந்தேன் என கூறியுள்ளார்.
எனினும், தொடர்ந்து விசாரித்ததில், மனஅழுத்தத்தில் இருந்தேன் எனவும், தொடர்ந்து சிறுவன் பணம் கேட்டதில் எரிச்சலடைந்தேன் எனவும் ரவி கூறியுள்ளார்.
இதனையடுத்து, ததியா போலீஸ் சூப்பிரெண்டு அமன் சிங் ரத்தோர், ரவியை உடனடியாக பணியில் இருந்து நீக்கும்படி காவலர் தலைமையகத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில் கேட்டு கொண்டுள்ளார்.