சுரங்க முறைகேடு வழக்கு: பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி வீட்டில் 2-வது நாளாக அமலாக்கத்துறை சோதனை
சுரங்க முறைகேடு ஊழல் புகார் தொடர்பாக பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி பூஜா சிங்கால் வீட்டில் 2-வது நாளாக அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.
ராஞ்சி,
ஜார்கண்ட் மாநில சுரங்கத்துறை செயலாளராக பூஜா சிங்கால் என்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி பணியாற்றி வருகிறார். இவர் மீது சுரங்க முறைகேடு உள்ளிட்ட ஊழல் புகார்கள் எழுந்துள்ளன. இது தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக பூஜா சிங்காலின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய இடங்களில் நேற்று முன்தினம் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியது. இந்த சோதனை நேற்று 2-வது நாளாக நீடித்தது.
பரியாட்டு பகுதியில் உள்ள பூஜாவின் கணவரின் ஆஸ்பத்திரி உள்பட 11 இடங்களில் ஒரே நேரத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனைகளில் ரூ.150 கோடி மதிப்பிலான முதலீடுகள் உள்ளிட்ட பல்வேறு பரிவர்த்தனைகள் தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. முன்னதாக பூஜாவின் அக்கவுண்டன்ட் வீட்டில் நேற்று முன்தினம் நடந்த சோதனையில் ரூ.19.31 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.