ஒலிபெருக்கியை அகற்ற வலியுறுத்தி போராட்டம், மராட்டியத்தில் பதற்றம்: மசூதிகள் முன் போலீசார் குவிப்பு

மராட்டியத்தில் மசூதிகளில் ஒலிபெருக்கிகளை அகற்ற வலியுறுத்தி ராஜ் தாக்கரே கட்சியினர் நடத்திய போராட்டத்தால் பதற்றம் ஏற்பட்டது.

Update: 2022-05-04 21:43 GMT
கோப்புப் படம் ANI
மும்பை,

மராட்டியத்தில் மசூதிகளில் ஒலிபெருக்கிகளை அகற்ற வலியுறுத்தி ராஜ் தாக்கரே கட்சியினர் நடத்திய போராட்டத்தால் பதற்றம் ஏற்பட்டது. மசூதிகள் முன் போலீசார் குவிக்கப்பட்டனர்.

மராட்டியத்தில் சிவசேனா தலைமையில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்து ஆட்சி செய்து வருகின்றன. இந்த நிலையில், முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயின் உறவினரும், நவநிர்மாண் சேனா தலைவருமான ராஜ் தாக்கரே மசூதிகளில் ஒலிபெருக்கிகளை அரசு அகற்றாவிட்டால், 4-ந்தேதி (நேற்று) முதல் ஏற்படும் சம்பவங்களுக்கு நான் பொறுப்பு அல்ல என்றும் எச்சரிக்கை விடுத்தார். இது தொடர்பாக அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து ராஜ் தாக்கரே தனது கட்சி தொண்டர்களுக்கு வெளிப்படையாக கடிதம் ஒன்றை எழுதினார். அதில், எங்காவது மசூதிகளில் ஒலிபெருக்கி ஒலிப்பதை கேட்டால், அங்கு அனுமன் பாடல்களை 2 மடங்கு சத்தத்துடன் ஒலிபரப்ப வேண்டும். அப்போது தான் அவர்கள் நமது நிலைமையை புரிந்துகொள்வார்கள் என கூறியிருந்தார்.

இதனால் மராட்டியத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து அசம்பாவித சம்பவங்களை தடுப்பதற்காக, மும்பை உள்பட மாநிலம் முழுவதும் நேற்று போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. குறிப்பாக மசூதிகளுக்கு வெளியே போலீசார் குவிக்கப்பட்டனர்.

இத்தகைய பலத்த பாதுகாப்புக்கு மத்தியிலும், ராஜ் தாக்கரேவின் அறிவுத்தலின்பேரில், அவரது கட்சியினர் சிலர் மசூதிகளில் ஒலிபெருக்கியை பயன்படுத்தியதை எதிர்த்து, அதன் அருகே ஒலிபெருக்கிகளில் அனுமன் பாடல்களை ஒலிக்கசெய்யும் வீடியோக்களும் வெளிவந்த வண்ணம் இருந்தன. இதுதொடர்பாக நவநிர்மாண் சேனா கட்சியினர் பலரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் செய்திகள்