கொரோனாவால் உயிரிழந்த முன்கள பணியாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி நிதியுதவி..!
கொரோனாவால் உயிரிழந்த 2 முன்கள பணியாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி நிதியுதவியை டெல்லி அரசு இன்று வழங்கியுள்ளது.
புதுடெல்லி,
கொரோனா பெருந்தொற்று என்ற கொடிய நோய் பாதிப்பு, இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டு முதல் தீயாய் பரவி பல்லாயிரக் கணக்கானோரை பலி வாங்கியது.
பலர் இந்த கொடிய வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் உயிர்பிழைக்கும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த போது, நமது நாட்டின் முன்களப் பணியாளர்களாக கருதப்படும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், ஆய்வக பணியாளர்கள் என பலரும் தங்கள் உயிரை பற்றிய கவலையின்றி கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து அவர்களை காப்பாற்றினர்.
அவர்களின் சேவைக்கு இந்த தேசம் என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறது.
இதற்கிடையே, கொரோனா பணியின் போது பாதிக்கப்பட்டு உயிரிழந்த முன்களப் பணியாளர்களுக்கு, டெல்லி அரசு ரூ.1 கோடி நிதியுதவி வழங்குவதாக 2020ல் அறிவித்திருந்தது.
இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்து, சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் காவல்துறை பணியாளர்கள் உட்பட பல முன்களப் பணியாளர்கள் நிதி உதவியைப் பெற்றுள்ளனர்.
இந்த நிலையில், இன்று டெல்லி சுகாதாரத்துறை மந்திரி சத்யேந்தர் ஜெயின், மருத்துவமனையில் பணிபுரியும் போது, கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த டாக்டர் மிதிலேஷ் குமார் சிங்கின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கினார். ‘அவரது சேவைகளுக்கு தேசம் என்றென்றும் கடமைப்பட்டிருக்கும்’ என்று கூறினார்.
कोरोना महामारी के दौरान अस्पताल में अपनी सेवा देते हुए डॉ मिथिलेश कुमार सिंह जी का निधन कोरोना की चपेट में आने से हुआ। आज उनके परिवार वालों से मिला और मुख्यमंत्री श्री @ArvindKejriwal जी के आदेश अनुसार उन्हें एक करोड़ की सम्मान राशि प्रदान की। देश सदैव उनकी सेवा के लिए ऋणी रहेगा। pic.twitter.com/4eyIQM7S7X
— Satyendar Jain (@SatyendarJain) April 28, 2022
அதனை தொடர்ந்து சத்யேந்தர் ஜெயின் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, “மறைந்த முனிஷ் தேவி என்பவர் கொரோனா காரணமாக பணியில் இருந்தபோது இறந்தார்.
நான் முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலின் உத்தரவின் பேரில், அவரது குடும்ப உறுப்பினர்களை இன்று சந்தித்தேன். அவர்களுக்குரூ.1 கோடி நிதியுதவி வழங்கினேன். எதிர்காலத்தில் அவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்தேன்" என்று தெரிவித்தார்.
இதன்மூலம், கொரோனா பணியின் போது பாதிக்கப்பட்டு கொரோனாவால் உயிரிழந்த 2 முன்கள பணியாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி நிதியுதவியை டெல்லி அரசு இன்று வழங்கியுள்ளது.