சந்திரயான்-3 விண்கல புகைப்படங்களை வெளியிட்ட இஸ்ரோ

நிலவின் மேற்பரப்பில் ஆய்வு செய்வதற்காக தயாரான சந்திரயான்-3 விண்கலத்தின் புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டு உள்ளது.;

Update:2022-04-25 18:57 IST





புதுடெல்லி,


இஸ்ரோ சார்பில் நிலவின் தென்துருவ பகுதியை ஆய்வு செய்ய சந்திரயான்-2 விண்கலம் கடந்த 2019ம் ஆண்டு ஜூலை மாதம் 22ந்தேதி விண்ணில் ஏவப்பட்டது. புவி சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட விண்கலம், படிப்படியாக 5 முறை புவி வட்டப்பாதையில் உயர்த்தப்பட்டது.

இதன்பின்பு அதே ஆண்டில் செப்டம்பர் 2ந்தேதி சந்திரயான்-2 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் தனியாக பிரிந்து நிலவின் மேற்பரப்பை நோக்கி பயணித்தது.  எனினும், நிலவிற்கு 2.1 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தபோது விக்ரம் லேண்டரின் தகவல் துண்டிக்கப்பட்டது.  நிலவின் இருண்ட பக்கத்தில் விழுந்த லேண்டரை விஞ்ஞானிகளால் தொடர்பு கொள்ள முடியாமல் போனது.

இந்த நிலையில், நிலவின் மேற்பரப்பில் ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலம் உருவாக்கும் பணி நடந்து வந்தது.  இதில், இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமுடன் ஈடுபட்டு வந்தனர்.  எனினும், கொரோனா பெருந்தொற்று, அதனை தொடர்ந்து ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஆகியவற்றால் தொடர்ச்சியாக திட்டம் நிறைவேறுவதில் காலதாமதம் ஏற்பட்டது.

இறுதியாக, நிலவிற்கு அனுப்பி வைக்கப்படும் சந்திரயான்-3 விண்கலம் திட்டத்திற்கான முதல் புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டு உள்ளது.  ஸ்பேஸ் ஆன் வீல்ஸ் என்ற தலைப்பில் இஸ்ரோ வெளியிட்டு உள்ள 17 நிமிட ஆவணப்பதிவு வீடியோவில், இந்தியா அனுப்பிய 75 செயற்கைக்கோள்கள் காட்டப்பட்டு உள்ளன.

அதில், நிலவின் மேற்பரப்பில் ஆய்வு பணிகளை மேற்கொள்வதற்கு தயாரான சந்திரயான்-3 லேண்டர் போன்ற புகைப்படமும் உள்ளது.  இந்த திட்டத்தினை நடப்பு ஆண்டு ஆகஸ்டில் செயல்படுத்த முயற்சி செய்து வருகிறோம் என இஸ்ரோ தெரிவித்து உள்ளது.

எனினும், பல்வேறு சோதனைகள் இன்னும் முடிக்கப்படாமல் உள்ளன.  அதனால், திட்டம் குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவேறுவது கடினம் என கூறப்படுகிறது.

கொரோனாவால் இந்த திட்டம் காலதாமதம் அடைந்து உள்ளது என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மந்திரி டாக்டர் ஜிதேந்திரா சிங் கூறியுள்ளார்.  சந்திரயான்-3 தவிர்த்து, வீடியோவில் ஆதித்யா எல்1 திட்டம் மற்றும் இந்திய விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் ஆகியவை பற்றிய விவரங்களும் இடம் பெற்றுள்ளன.

சூரியனின் எண்ணற்ற பண்புகள் பற்றி படிப்பதற்கும், அதிக அளவில் கதிர்வீச்சுகள் வெளியேறுவது, அவை எங்கிருந்து வெளியேறுகின்றன உள்ளிட்டவற்றை ஆய்வு செய்வதற்கும் ஆதித்யா எல்1 திட்டம் செயல்படுத்தப்படும்.

இதற்காக ஐரோப்பிய விண்வெளி கழகத்துடன் இணைந்து முன்பிருந்தே இந்தியா தொடர்ந்து பணியாற்றி வருகிறது.  சந்திரன் மற்றும் சூரியனின் ஆய்வு பணி திட்டத்திற்கான செயல்பாடுகளை கண்காணிக்க நெட்வொர்க் ஒன்றை உருவாக்கும் பணியும் நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்