விசாரணை கமிஷன் அமைக்கக்கோரி காஷ்மீர் பண்டிட்டுகள் தர்ணா போராட்டம்
பிரதமர் மோடி நேற்று காஷ்மீருக்கு சென்ற நிலையில் விசாரணை கமிஷன் அமைக்கக்கோரி காஷ்மீர் பண்டிட்டுகள் தர்ணா போராட்டம் நடத்தினர்.
ஜம்மு,
பிரதமர் மோடி நேற்று காஷ்மீருக்கு சென்ற நிலையில், அவரது கவனத்தை ஈர்க்கும் வகையில், காஷ்மீர் பண்டிட்டுகள் நேற்று ஜம்முவில் தர்ணா போராட்டம் நடத்தினர். விக்ரம் கவுல் என்பவர் தலைமையில், காஷ்மீர் பண்டிட் தன்னார்வலர்கள், ஜம்முவில் பிரஸ் கிளப் அருகே தர்ணாவில் ஈடுபட்டனர். பிரதமர் வருகையை முன்னிட்டு அவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர்.
பண்டிட்டுகளின் மற்றொரு குழு, ஜம்முவில் இன்னொரு இடத்தில் தர்ணா போராட்டம் நடத்தியது. சந்தீப் மாவா என்பவர் தலைமையில், ஸ்ரீநகரில் கடந்த 4 நாட்களாக சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் நடந்து வருகிறது.
கடந்த 1990-ம் ஆண்டு, காஷ்மீரில் இருந்து பண்டிட்டுகள் வெளியேற்றப்பட்டது பற்றி, விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும். கொலைகள், கோவில் அழிப்பு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இன்னும் சில நாட்களில், தங்களது கோரிக்கை ஏற்கப்படாவிட்டால், தீக்குளித்து உயிரிழப்பேன் என்று சந்தீப் மாவா எச்சரிக்கை விடுத்துள்ளார்.