கவுகாத்தி உள்ளாட்சி தேர்தல்: பாஜக கூட்டணி அமோக வெற்றி..!

கவுகாத்தியில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் 58 வார்டுகளில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றது.;

Update:2022-04-24 19:53 IST
image courtesy: BJP Assam Pradesh twitter
கவுகாத்தி,

கவுகாத்தியில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் மொத்தமுள்ள 60 வார்டுகளில் 58 வார்டுகளில் பாஜக தனது கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து வெற்றி பெற்றது. கவுகாத்தி மாநகராட்சியின் 57 வார்டுகளில் வெள்ளிக்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்றது. 3 வார்டுகளில் பாஜக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

ஆம் ஆத்மி கட்சி மற்றும் பிராந்தியக் கட்சியான அசாம் ஜாதிய பரிஷத், தலா ஒரு வார்டில் வெற்றி பெற்றன. காங்கிரஸ் கட்சி ஒரு வார்டில் கூட வெற்றி பெறவில்லை. இந்த உள்ளாட்சித் தேர்தலில் 52 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளன. மேலும் இந்த உள்ளாட்சி தேர்தலில், அனைத்துச் வாக்குச் சாவடிகளிலும் முதன்முறையாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இந்தத் தேர்தலில் மொத்தம் 197 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். பாஜக 53 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தியது, அதில் 3 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆளுங்கட்சியின் கூட்டணிக் கட்சியான அசோம் கண பரிஷத் 7 வார்டுகளில் போட்டியிட்டது. காங்கிரஸ் 54 வார்டுகளிலும், ஆம் ஆத்மி கட்சி 38 வார்டுகளிலும், அசாம் ஜாதிய பரிஷத் 25 இடங்களிலும், சிபிஎம் 4 வார்டுகளிலும் போட்டியிட்டன.

இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தலில் 58 வார்டுகளில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றதை முன்னிட்டு பிரதமர் மோடி கவுகாத்தி மக்களுக்கு நன்றி தெரிவித்தார். இதுகுறித்து தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் அவர், 'நன்றி கவுகாத்தி! இந்த அழகான நகரத்தின் மக்கள் வளர்ச்சியின் நிகழ்ச்சி நிரலை உருவாக்க பாஜகவுக்கு அற்புதமான ஆணையை வழங்கியுள்ளனர். 

அவர்கள் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவின் கீழ் மாநில அரசாங்கத்தின் கடின உழைப்பையும் ஆசீர்வதித்துள்ளனர். ஒவ்வொரு பாஜக காரியகர்த்தாவின் கடின உழைப்புக்கும் எனது நன்றிகள்' என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்