தெலுங்கானா: மின்சார ஸ்கூட்டருக்கு சார்ச் போடும் போது பேட்டரி வெடித்து முதியவர் உயிரிழப்பு !
மின்சார ஸ்கூட்டருக்கு சார்ச் போடும் போது பேட்டரி வெடித்து முதியவர் உயிரிழந்ததுடன், 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஐதராபாத்,
தெலுங்கானா மாநிலம், நிஜாமாபாத் மாவட்டத்தில், வீட்டிற்குள் சார்ஜில் வைக்கப்பட்டிருந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரி திடீரென வெடித்து தீப்பிடித்தது. இந்த சம்பவத்தில் 80 வயது முதியவர் உயிரிழந்தார். அவரது மகன் பிரகாஷ், மனைவி கமலம்மா, மருமகள் கிருஷ்ணவேணி ஆகியோர் காப்பாற்ற முயன்றபோது படுகாயம் அடைந்தனர்.
பிரகாஷ் ஒரு வருடமாக மின்சார ஸ்கூட்டரைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. தனியார் மின்சார வாகன உற்பத்தி நிறுவனத்தின் அலட்சியத்தால் மின்சார ஸ்கூட்டர் மரணத்தை ஏற்படுத்தியதாக போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மின்சார வாகன உற்பத்தின் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறும்போது, "இந்த சம்பவத்திற்கு நாங்கள் மிகவும் வருந்துகிறோம். மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இரங்கல் தெரிவிக்கிறோம்."
எங்கள் கூற்றுப்படி இந்த வாகனம் நேரடியாக எங்களிடமிருந்து விற்பனை செய்யப்பட்டதற்கான எந்தப் பதிவேடும் இல்லை. வாகனம் செகண்ட் ஹேண்ட் விற்பனை முறையில் மூலம் வாங்கப்பட்டதா என்பதைச் சரிபார்த்து வருவதாக உற்பத்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த இரண்டு மாதங்களில் மின்சார இரு சக்கர வாகனங்கள் சம்பந்தப்பட்ட பல விபத்துக்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. இந்த சம்பவங்களில் சிலர் உயிரிழந்துள்ளன. மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
மத்திய போக்குவரத்து மந்திரி நிதின் கட்கரி இதுகுறித்து கூறும்போது, "தொடரும் மின்சார ஸ்கூட்டர் விபத்துகள் குறித்து விசாரிக்கவும், தீர்வு நடவடிக்கைகள் குறித்த பரிந்துரைகளை வழங்கவும் நாங்கள் ஒரு நிபுணர் குழுவை அமைத்துள்ளோம்" என்று மத்திய மந்திரி டுவீட்டரில் தெரிவித்துள்ளார்.