டெல்லியில் ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்கள் இன்று வேலை நிறுத்தம்
டெல்லி ஆட்டோ மற்றும் டாக்ஸி அசோசியேஷன் இன்றும் நாளையும் டெல்லியில் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது.
புதுடெல்லி,
ஆட்டோ, டாக்சி கட்டணத்தை உயர்த்த வேண்டும், பெட்ரோல், டீசல், இயற்கை எரிவாயு உள்ளிட்ட எரிபொருள் விலையை குறைக்க வேண்டும் என்று டெல்லி ஆட்டோ மற்றும் கால் டாக்சி ஓட்டுனர்களின் சங்கங்கள் கோரிக்கை விடுத்து வருகின்றன.
அவர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதாக டெல்லி கெஜ்ரிவால் அரசு உறுதி அளித்தது. காலக்கெடுவுக்குள் கட்டண திருத்தம் குறித்து ஆய்வு செய்ய குழு ஒன்றை அமைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்றும் நாளையும் டெல்லியில் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக டெல்லி ஆட்டோ மற்றும் டாக்ஸி அசோசியேஷன் அறிவித்துள்ளது. இந்த இரண்டு நாட்களில் ஆட்டோக்கள் மற்றும் டாக்சிகள் டெல்லி சாலைகள் மற்றும் தெருக்களில் ஓடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு மற்றும் டெல்லி அரசுகள் தங்கள் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கவில்லை என்று டெல்லி ஆட்டோ சங்கத்தின் பொதுச் செயலாளர் ராஜேந்திர சோனி குற்றம் சாட்டியுள்ளார். இதனால் இரண்டு நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் நிறுத்தப்படாது என்றும், எங்களுக்கு லக்னோ, ஹைதராபாத், கொல்கத்தா மற்றும் மும்பையில் ஆதரவு உள்ளதால் இன்று அங்கு வேலை நிறுத்தம் தொடங்கும் என்றும் டெல்லி சர்வோதயா ஓட்டுநர்கள் சங்கத்தின் தலைவர் கமல்ஜீத் கில் தெரிவித்துள்ளார்.