ஆந்திர பிரதேசத்தில் அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் கல்வீசி தாக்குதல்; 15 பேர் படுகாயம்
ஆந்திர பிரதேசத்தில் அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் நடந்த கல்வீச்சு தாக்குதல் சம்பவத்தில் 15 பேர் காயமடைந்து உள்ளனர்.
கர்னூல்,
டெல்லி ஜஹாங்கீர்புரியில் அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின் போது நேற்று இரு பிரிவினர் இடையே மோதல் வெடித்தது. இதில் 9 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த வன்முறை குறித்து விசாரிக்க 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த சம்பவத்தில் 9 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோன்று ஆந்திர பிரதேசத்தின் கர்னூல் மாவட்டத்தில் ஆலூர் பகுதியில் நேற்று அனுமன் ஜெயந்தி ஊர்வலம் நடத்தப்பட்டது.
இதில், இரு சமூகத்தினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அவர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தில் 15 பேர் காயமடைந்து உள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்ததும், ஆயுத படைகள் குவிக்கப்பட்டன. இதனை தொடர்ந்து நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
கல்வீச்சு தாக்குதல் பற்றிய வீடியோ வெளியானதன் அடிப்படையில் போலீசார் 20 பேரை விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர். வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு உள்ளன. அந்த பகுதியில், போலீசார் கண்காணிப்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.