சிவசேனா அலுவலகம் முன்பு ஒலிபெருக்கியில் அனுமான் சாலிசா பாடலை ஒலிபரப்பிய எம்என்எஸ் கட்சி தலைவர் கைது!

மும்பையில் உள்ள சிவசேனா பவன் முன்பு, அனுமான் சாலிசா பாடலை ஒலிபெருக்கி மூலம் சத்தமாக பாடலை ஒலிபரப்பியதற்காக மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா(எம்என்எஸ்) கட்சியின் முக்கிய தலைவர் ஒருவர் கைது செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update:2022-04-10 16:28 IST
மும்பை,

மும்பையில் உள்ள சிவசேனா பவன் முன்பு, அனுமான் சாலிசா பாடலை ஒலிபெருக்கி மூலம் சத்தமாக பாடலை ஒலிபரப்பியதற்காக மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா(எம்என்எஸ்) கட்சியின் முக்கிய தலைவர் ஒருவர் கைது செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ராம நவமி விழாவானது நாடு முழுவதும்  இன்று கொண்டாடப்படும் நிலையில், இன்று காலை மும்பையின் தாதரில் உள்ள சிவசேனா பவனுக்கு எதிரே இன்று காலை ஒலிபெருக்கி மற்றும் எம்என்எஸ் கட்சிக் கொடியுடன் கூடிய டாக்சியில், அனுமான் சாலிசா பாடல் அதிக சத்தத்துடன் ஒலிபரப்பு செய்யப்பட்டது. உடனே பணியில் இருந்த ஒரு போலீஸ்காரர் டாக்சியைக் கண்டவுடன், அவர்களை தடுத்து நிறுத்தினார். பின்னர், வண்டியில் இருந்த (எம்என்எஸ்) தலைவர் யஷ்வந்த் கில்லேடர் மற்றும் டிரைவரும்  காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

மும்பை போலீசார் (எம்என்எஸ்) தலைவர் யஷ்வந்த் கில்லேடரையும்,  டாக்சி டிரைவரையும் கைது செய்தனர். அவர்கள் இதுவரை யாருக்கும் எதிராக முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) பதிவு செய்யவில்லை. பொது இடத்தில் டாக்சியில் ஒலிபெருக்கியை இயக்குவதற்கு கில்லேடருக்கும் டிரைவருக்கும் போலீஸ் அனுமதி அளிக்கப்பட்டதா என்று விசாரித்து வருகின்றனர். அவர்களிடம் உள்ள ஆவணங்கள் மற்றும் அனுமதிகளை சரிபார்த்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

இந்த கைதை கண்டித்து அக்கட்சியின் முக்கிய தலைவர் சந்தீப் தேஷ்பாண்டே மற்றும் சில கட்சித் தொண்டர்கள் காவல் நிலையத்தில் கூடி ஹனுமான் சாலிசாவை கோஷமிடத் தொடங்கினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் கைது செய்யப்படும்  முன் எம்என்எஸ் தலைவர் யஷ்வந்த் கில்லேடர் கூறியதாவது,  “அரசியல் ஆதாயம் வேண்டி, முதல் மந்திரி பதவையை அடைவதற்காக சிவசேனா இந்துத்துவத்தை புறக்கணித்துள்ளது. நாங்கள் இந்த பண்டிகையை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதை தெரிவிப்பதற்காகவே இந்த டாக்சி யாத்திரையை செயல்படுத்தினோம். மக்கள் யாரேனும் அதனை தொடர விரும்பினால் எங்களை தொடர்பு கொள்ளவும். நாங்கள் அவர்களுக்கு டாக்சியை வழங்குவோம்” என்றார்.

இந்த சம்பவம் குறித்து மராட்டிய மாநில மந்திரி அதித்ய தாக்கரே கூறியதாவது, “அவர்கள் நீர்த்துப்போன அவர்களுடைய கட்சியை(எம்என்எஸ்)  மீட்டெடுக்க முயற்சிக்கிறார்கள். எங்களுடைய இந்துத்துவம் அனைவருக்கும் தெரியும். தேர்தல் காலத்தில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நாங்கள் நிறைவேற்றுவோம்” என்றார்.

மேலும் செய்திகள்