படிப்பு முடித்த 6 மாதங்களுக்குள் பட்டம் வழங்க வேண்டும் - பல்கலைக்கழக மானியக்குழு உத்தரவு
மாணவர்கள் படிப்பை முடித்த 6 மாதங்களுக்குள் பட்டம் வழங்க வேண்டும் என உயர்கல்வி நிறுவனங்களுக்கு, பல்கலைக்கழக மானியக்குழு உத்தரவிட்டுள்ளது.
சென்னை:
பல்கலைக்கழக மானியக்குழு, உயர்கல்வி நிறுவனங்களான பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
மாணவர்கள் படித்து முடித்த பட்டங்களை உயர்கல்வி நிறுவனங்கள் வழங்குவதில் தாமதம் ஏற்படுவது குறித்து அதிக எண்ணிக்கையில் குறைகள், புகார்கள் பல்கலைக்கழக மானியக்குழுவுக்கு வந்து இருக்கிறது. பட்டப்படிப்பு, மதிப்பெண் பட்டியல் மற்றும் இதர சான்றிதழ் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதால், உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு விஷயங்களில் மாணவர்களுக்கு பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகிறது.
இந்த விவகாரத்தில் மானியக்குழு அதிக கவனம் செலுத்துகிறது. படிப்பை முடித்த ஒரு மாணவர் பட்டம் பெறுவது அவருடைய வாழ்வில் கிடைத்த பெரும் பாக்கியம். ஆகவே இதை கருத்தில் கொண்டு, படிப்பை முடிக்கும் மாணவர்களுக்கு 180 நாட்களுக்குள் (6 மாதங்களுக்குள்) பட்டத்தை வழங்கவேண்டும்.
இதற்கான விதிமுறைகள் பல்கலைக்கழக மானியக்குழுவின் இணையதளத்தில் இருக்கிறது. எனவே பரிந்துரைக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் வெற்றிகரமாக படிப்பை முடிக்கும் மாணவர்களுக்கு பட்டத்தை அனைத்து உயர்கல்வி நிறுவனங்கள் வழங்கவேண்டும்.
மேலும் மாணவர்களுக்கு இறுதியாண்டு டிரான்ஸ்கிரிப்டுகளுடன் தற்காலிக பட்டத்தையும் வழங்கவேண்டும். பட்டம் வழங்குவதில் பல்கலைக்கழக மானியக்குழு விதிமுறைகளை மீறும் பல்கலைக்கழகங்களுக்கு எதிராக பல்கலைக்கழக மானியக்குழு ஒழுங்குமுறை விதிகளின்படி தண்டனைக்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.