ஜம்மு-காஷ்மீர்: பயங்கரவாதிகள் மறைவிடத்தில் சீன துப்பாக்கி, வெடிமருந்துகள் பறிமுதல்
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் மறைவிடத்தில் சீன துப்பாக்கி, வெடிமருந்துகள் போன்ற ஆயுதங்களை ராணுவத்தினர் பறிமுதல் செய்தனர்.
ஸ்ரீநகர்,
ஜம்மு காஷ்மீரிலுள்ள பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுப்பகுதி அருகே உள்ள கிராமத்தில் பயங்கரவாதிகளின் மறைவிடத்தை பாதுகாப்புப் படையினர் சுற்றிவளைத்தனர்.
அப்போது அங்கு பயங்கரவாதிகளின் மறைவிடத்தில் பயங்கரமான ஆயுதங்கள், வெடிமருந்துகள், இரண்டு ஏகே-47 துப்பாக்கிகள், இரண்டு மேகசின்கள் மற்றும் 63 ரவுண்டுகள், ஒரு 223 போர் ஏகே வடிவ துப்பாக்கி, மற்றும் 20 ரவுண்டுகள், ஒரு சீன துப்பாக்கி ஆகியவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அங்கிருந்து ஆயதங்களை பறிமுதல் செய்த ராணுவத்தினர், மிகப்பெரிய சதித்திட்டத்தை முறியடித்ததாக தெரிவித்தனர். ராணுவம் மற்றும் போலீசார் இணைந்து நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது இந்த மறைவிடம் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறிய அதிகாரிகள், இது தொடர்பாக யாரையும் கைதுசெய்யவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.