“நாட்டில் 1.64 லட்சம் அங்கன்வாடிகளில் குடிநீர் வசதி இல்லை” - மத்திய மந்திரி தகவல்
நாட்டில் 4.5 லட்சம் அங்கன்வாடிகளில் குடிநீர், கழிவறை வசதிகள் இல்லை என மத்திய மந்திரி ஸ்மிரிதி இராணி தெரிவித்துள்ளார்.;
புதுடெல்லி,
இந்தியாவில் உள்ள அங்கன்வாடிகள் நிலை குறித்து மாநிலங்களவையில் திமுக எம்.பி. கனிமொழி என்.வி.என்.சோமு, கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிரிதி இராணி பதிலளித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
“கடந்த 3 ஆண்டுகளில் 13.99 லட்சம் அங்கன்வாடிகள் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டு, அதில் 13.89 லட்சம் அங்கன்வாடிகள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. இதில் 12.55 லட்சம் அங்கன்வாடிகள் சொந்த மற்றும் கான்கிரீட் கட்டிடங்களில் இயங்குகின்றன. 1.64 லட்சம் அங்கன்வாடிகளில் குடிநீர் வசதி இல்லை. 2.86 அங்கன்வாடிகளில் கழிப்பிட வசதி இல்லை.
இந்த நிலையை மாற்ற மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. ஒவ்வொரு அங்கன்வாடியிலும் குடிநீர் வசதியை ஏற்படுத்த பத்தாயிரம் ரூபாயும், கழிப்பிட வசதிக்கென 12 ஆயிரம் ரூபாயும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது” என்று அவர் கூறினார்.