இந்தியா வந்தார் ரஷிய வெளியுறவு மந்திரி: பிரதமர் மோடியுடன் இன்று சந்திப்பு..!
இந்தியா வந்துள்ள ரஷிய வெளியுறவு மந்திரி, பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்திக்க உள்ளார்.;
புதுடெல்லி,
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ள நிலையில், ரஷிய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ் ஆசியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். சீனாவில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர், அந்த பயணத்தை முடித்துக்கொண்டு 2 நாள் அரசுமுறை பயணமாக நேற்று டெல்லிக்கு வந்தார்.
இந்நிலையில் ரஷிய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ் இன்று (வெள்ளிக்கிழமை) பிரதமர் மோடியையும், மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கரையும் சந்தித்து பேசுகிறார்.
உக்ரைன் போருக்கிடையே, ரஷியாவிடம் இருந்து இந்தியா தள்ளுபடி விலையில் டாலருக்கு பதிலாக இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதற்கு மேலை நாடுகள் அதிருப்தி தெரிவித்துள்ளன. இந்த சூழ்நிலையில், ரஷிய மந்திரி இந்தியா வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.