ஹிஜாப் விவகாரம்; பெண்கள் எப்படி உடை அணிய வேண்டும் என்று பேச யாருக்கும் உரிமை இல்லை - பிரபஞ்ச அழகி!
பிரபஞ்ச அழகி பட்டம் வென்ற ஹர்நஸ் கவுர் சந்து, ஹிஜாப் விவகாரத்தில் யாரும் எதிர்பாராத வகையில் கருத்து தெரிவித்து ஆச்சரியப்பட வைத்துள்ளார்.
சண்டிகர்,
பிரபஞ்ச அழகி பட்டம் வென்ற இந்தியாவின் ஹர்நஸ் கவுர் சந்து, ஹிஜாப் விவகாரத்தில் யாரும் எதிர்பாராத வகையில் கருத்து தெரிவித்து ஆச்சரியப்பட வைத்துள்ளார்.
இன்று பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் கலந்துகொண்டார். அப்போது அவரிடம் ஹிஜாப் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் கூறிய பதில் வருமாறு:-
“இது ஒவ்வொரு பெண்ணின் தனிப்பட்ட விருப்பம். அதனால், இந்தியாவில் உள்ள இளம்பெண்கள் எவ்வாறு ஆடை அணிய வேண்டும் என்பதையோ, அவர்கள் எப்படி வாழ வேண்டும் என்பதை பற்றியோ பேச யாருக்கும் உரிமை இல்லை.
இந்த விவகாரத்தில் அரசியல் செய்பவர்கள் தவறு செய்கிறார்கள்.
ஒரு பெண்ணை வேறொரு நபர் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டால், அவள் வெளியே வந்து பேச வேண்டும்.
அவள் ‘அவளுடைய’ விருப்பப்படி வாழட்டும்.
நாம் அனைவரும் வெவ்வேறு கலாச்சாரத்தை சேர்ந்த பெண்கள். நாம் ஒருவருக்கொருவர் மதிப்பளித்து நடந்துகொள்ள வேண்டும்.”
இவ்வாறு தெரிவித்தார்.
இதன்மூலம், கர்நாடகாவில் ஹிஜாப் விவகாரத்தை கையிலெடுத்து, அரசியல் செய்பவர்களை ஹர்நஸ் கவுர் சந்து மறைமுகமாக தாக்கி பேசியுள்ளார்.