பொது இடத்தில் நிதிஷ்குமார் கன்னத்தில் அறைந்த வாலிபர்...!

பொது இடத்தில் பீகார் மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமார் கன்னத்தில் ஒரு வாலிபர் அறைந்தார்.

Update: 2022-03-28 03:32 GMT
பாட்னா, 

பீகார் மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமார் நேற்று தான் குழந்தை பருவத்தில் வசித்த பகுதிக்கு சென்றார். தலைநகர் பாட்னா அருகே உள்ள பக்தியார்பூர்தான் அந்த பகுதி ஆகும்.

அங்கு தனது பழைய நண்பர்களை சந்தித்து பேசினார். பிறகு உள்ளூர் சுதந்திர போராட்ட வீரர் ஒருவரின் சிலைக்கு மாலை அணிவித்தார்.

அப்போது, பின்னால் இருந்து வந்த சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர், யாரும் எதிர்பாராதவகையில் நிதிஷ்குமார் கன்னத்தில் அறைந்தார்.

இதனால் அங்கிருந்த எல்லோரும் அதிர்ச்சி அடைந்தனர். நிதிஷ்குமாரின் பாதுகாப்பு குழுவினர், அந்த வாலிபரை பாய்ந்து பிடித்தனர். அவரை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

போலீசார் அந்த வாலிபரை இழுத்து சென்றனர். போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். வாலிபர், டி-சர்ட்-பேண்ட் அணிந்திருந்தார். அவர் யார் என்று தெரியவில்லை.

இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் எதுவும் கூற மறுத்து விட்டனர். இருப்பினும், மேலிட வட்டாரங்கள் சம்பவத்தை உறுதிப்படுத்தின. இது பீகார் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்