பெண்களும் குழந்தைகளும் ஜனநாயக நாட்டில் உயிருடன் எரிக்கப்படுவது வேதனையளிக்கிறது - மே.வங்காள கவர்னர்

சமீபகால வரலாற்றில் இதுபோன்ற படுகொலைகளை நாம் யாரும் பார்த்ததில்லை என்று மேற்கு வங்காள கவர்னர் ஜக்தீப் தன்கர் கூறினார்.

Update: 2022-03-23 16:15 GMT
கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பாது ஷேய்க் என்பவர் நேற்று முன்தினம் இரவு படுகொலை செய்யப்பட்டார். இதனையடுத்து, இவரது கொலை காரணமாக சொந்த ஊரான பீர்பூம் மாவட்டம் ராம்பூர்ஹாட்டில் போக்டுய் கிராமத்தில் ஏற்பட்ட வன்முறையில், நேற்று அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் பல வீடுகளுக்கு தீ வைத்தனர், அதில் 8 பேர் உயிருடன் எரித்து கொல்லப்பட்டனர்.

இந்த வன்முறை சம்பவம் மேற்கு வங்காள மாநிலம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினருக்கு எதிராக பாஜக போராட்டம் நடத்தி வருகிறது.

இந்நிலையில், இன்று கொல்கத்தாவில் உள்ள விக்டோரியா நினைவிடத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட அருங்காட்சியகத்தை காணொலி வாயிலாக திறந்து வைத்து பிரதமர் மோடி பேசினார். அப்போது இந்த வன்முறை சம்பவத்தை "கொடூரமானது" என்று குறிப்பிட்ட அவர், குற்றவாளிகளை மன்னிக்கக் கூடாது என்றார்.

இதனை தொடர்ந்து, மேற்கு வங்காள கவர்னர் ஜக்தீப் தன்கர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, “பெண்களும் குழந்தைகளும் உயிருடன் எரிக்கப்படுவதை விட ஜனநாயகத்தில் வேதனை தரக்கூடியது வேறு எதுவும் இருக்க முடியாது.

இந்த விவகாரத்தில் இனி நான் எதுவும் பேச மாட்டேன். பிரதமர் பேசியதை நீங்கள் அனைவரும் கேட்டிருப்பீர்கள். சமீபகால வரலாற்றில் இதுபோன்ற படுகொலைகளை நாம் யாரும் பார்த்ததில்லை” என்றார்.

இதற்கிடையே, பீர்பூம் வன்முறை சம்பவம் தொடர்பாக கொல்கத்தா ஐகோர்ட் தாமாக முன்வந்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்