உ.பி.யில் மிட்டாய் சாப்பிட்ட 4 குழந்தைகள் பலியான சம்பவம்; போலீஸ் விசாரணைக்கு யோகி ஆதித்யநாத் உத்தரவு
இன்று காலை மிட்டாய் சாப்பிட்ட சிறிது நேரத்தில் அந்த குழந்தைகள் உடல்நிலை மோசமாகியுள்ளது. உடனே அவர்களை மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.;
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் குஷிநகர் மாவட்டம் காசியா பகுதியில் மிட்டாய் சாப்பிட்ட 4 குழந்தைகள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ள அம்மாநில முதல் மந்திரி யோகி அதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
இந்த சம்பவம் பற்றி கிராமவாசிகள் கூறுகையில், திலீப்நகர் கிராமத்தில் வசிக்கும் முகியா தேவி என்ற பெண், காலையில் தனது வீட்டை துடைக்கும் போது, ஐந்து மிட்டாய்கள் மற்றும் சில நாணயங்கள் அடங்கிய பிளாஸ்டிக் பையை கண்டுபிடித்தார். தேவி தனது மூன்று பேரக்குழந்தைகளுக்கும் அக்கம்பக்கத்தில் உள்ள மற்றொரு குழந்தைக்கும் அந்த மிட்டாய்களை வழங்கினார்.
ஆனால், இன்று காலை மிட்டாய் சாப்பிட்ட சிறிது நேரத்தில் அந்த குழந்தைகள் உடல்நிலை மோசமாகியுள்ளது. விஷம் கலந்த அந்த மிட்டாய்களை சாப்பிட்ட உடனே குழந்தைகள் மயக்கமடைந்தனர்.உடனே அவர்களை மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர்கள் நால்வரும் உயிரிழந்தனர்.
உயிரிழந்த குழந்தைகள் மஞ்சனா (5), ஸ்வீட்டி (3) மற்றும் சமர் (2) என 3 பேர் உடன்பிறந்த சகோதர சகோதரிகள் என அடையாளம் காணப்பட்டனர். மேலும், அருகில் வசித்த ஐந்து வயது அருண், உயிரிழந்த நான்காவது சிறுவன் ஆவான்.
இது தொடர்பாக போலீஸ் விசாரணை செய்து வருகிறது. எக்காரணத்தை கொண்டும் குற்றவாளியை தப்பிக்க விடமாட்டோம். மீதமுள்ள ஒரு மிட்டாய் தடயவியல் பரிசோதனைக்காக பாதுகாக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது என்று எஸ்.பி சச்சிந்திரா பட்டேல் தெரிவித்தார்.
உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த முதல் மந்திரி யோகி அதித்யநாத் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
விஷமாக மாறிய மிட்டாயால் அக்கா தம்பி என ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 குழந்தைகளும் அண்டை வீட்டு சிறுவனும் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவத்தால் அந்த கிராமம் முழுவதும் சோகத்தில் மூழ்கியுள்ளது.