உக்ரைனில் உயிரிழந்த மாணவர் நவீன் உடல் இன்று கர்நாடகம் வருகிறது
உக்ரைனில் ரஷியாவின் தாக்குதலில் உயிரிழந்த மாணவர் நவீன் உடல் 20 நாட்களுக்கு பிறகு இன்று (திங்கட்கிழமை) கர்நாடகம் வருகிறது.
பெங்களூரு,
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ளது. இந்த போர் கடந்த பிப்ரவரி மாதம் 24-ந் தேதி தொடங்கியது. இதனால் உக்ரைனில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்திய மருத்துவ மாணவர்கள் சிக்கி தவித்தனர். அவர்களை பாதுகாப்பாக அழைத்துவர மத்திய அரசு களத்தில் குதித்தது. சிறப்பு விமானங்கள் மூலம் மாணவர்கள் அழைத்து வரப்பட்டனர். தலைநகர் கீவ் மற்றும் கார்கிவ் நகரங்கள் மீது ரஷிய படைகள் தீவிர தாக்குதலை நடத்தின.
இதனால் கார்கிவ் நகரில் சிக்கிய இந்திய மாணவர்கள் பதுங்கி குழிகளில் தங்கி இருந்தனர். கர்நாடகத்தை சேர்ந்த மாணவர் நவீன் (வயது 22) கடந்த 1-ந் தேதி உணவு பொருட்களை வாங்குவதற்கு அங்கிருந்து மேலே வந்து ஒரு கடையின் முன்பு வரிசையில் நின்றிருந்தார். அப்போது ரஷியாவின் ஏவுகணை தாக்குதலில் நவீன் உயிரிழந்தார். அவரது உடல் பதப்படுத்தப்பட்டு கார்கிவ் சவக்கிடங்கில் வைக்கப்பட்டு இருந்தது.
அவரது உடலை இந்தியா எடுத்துவர வெளியுறவுத்துறை தீவிர முயற்சியில் இறங்கியது. அதன் பலனாக மாணவர் நவீனின் உடல் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 3 மணிக்கு கர்நாடகம் கொண்டு வரப்படுகிறது. விமானம் மூலம் பெங்களூரு எச்.ஏ.எல். விமான நிலையத்திற்கு வருகிறது. இங்கிருந்து நவீனின் உடல் அவரது சொந்த ஊரான ஹாவேரி மாவட்டம் ராணிபென்னூர் தாலுகா சலகேரி கிராமத்திற்கு எடுத்து செல்லப்படுகிறது.
அங்கு அவரது வீட்டில் இறுதிச்சடங்குகள் நடைபெறுகின்றன. முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நேரில் அஞ்சலி செலுத்த உள்ளதாக கூறப்படுகிறது. இறுதிச்சடங்குகள் முடிவடைந்ததும் அவரது உடல், மருத்துவ ஆராய்ச்சிக்காக தானமாக வழங்க அவரது பெற்றோர் முடிவு செய்துள்ளனர். உயிரிழந்து 20 நாட்களுக்கு பிறகு நவீனின் உடல் எடுத்து வரப்படுவதால் அவரது பெற்றோர் துக்கத்திலும் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.