தொலைபேசி ஒட்டுக்கேட்பு வழக்கு: பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ராஷ்மி சுக்லா போலீஸ் நிலையத்தில் ஆஜர்

தொலைபேசி ஒட்டுக்கேட்பு வழக்கில் ராஷ்மி சுக்லா நேற்று விசாரணைக்காக போலீஸ் நிலையத்தில் ஆஜரானார். அவரிடம் 2 மணி நேரம் விசாரணை நடந்தது.;

Update:2022-03-17 06:15 IST
மும்பை,

மராட்டிய போலீஸ் துறை இடமாற்றத்தில் நடந்ததாக கூறப்படும் முறைகேடு தொடர்பாக உளவுப்பிரிவு தலைவராக இருந்த ஐ.பி.எஸ். பெண் அதிகாரி ராஷ்மி சுக்லா தொலைபேசி அழைப்புகளை ஒட்டுகேட்டு, அது தொடர்பான கடிதத்தை டி.ஜி.பி.க்கு அனுப்பினார். ராஷ்மி சுக்லா அனுப்பிய இந்த கடிதத்தை கடந்த ஆண்டு பா.ஜனதா முன்னாள் முதல்-மந்திரியும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்தநிலையில் சட்டவிரோதமாக தொலைபேசி ஒட்டு கேட்டதாகவும், அரசின் ரகசியங்களை கசிய விட்டதாகவும் ஐ.பி.எஸ். அதிகாரி ராஷ்மி சுக்லா மீது சமீபத்தில் மராட்டிய போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் அவரை நேரில் ஆஜாராகுமாறு பலமுறை சம்மன் அனுப்பினர். இருப்பினும் தற்போது ஐதராபாத்தில் சி.ஆர்.பி.எப். கூடுதல் டி.ஜி.பி.யாக உள்ள ராஷ்மி சுக்லா நேரில் ஆஜராகவில்லை.

இந்த நிலையில் ஏப்ரல் 1-ந் தேதி வரை ராஷ்மி சுக்லா மீது கைது நடவடிக்கை எடுக்க மும்பை ஐகோர்ட்டு சமீபத்தில் தடை விதித்தது. மேலும் 16-ந் தேதி மற்றும் 23-ந் தேதி காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை கொலாபா போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு ராஷ்மி சுக்லாவுக்கு கோர்ட்டு உத்தரவிட்டது.

இதையடுத்து கோர்ட்டு உத்தரவின்படி ராஷ்மி சுக்லா தனது வக்கீலுடன் நேற்று காலை 11 மணிக்கு தெற்கு மும்பையில் உள்ள கொலாபா போலீஸ் நிலையத்திற்கு வந்தார். 2 மணி நேரத்திற்கும் மேல் அவரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து மதியம் 1.30 மணி அளவில் அவர் போலீஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றார்.

மேலும் செய்திகள்