மாணவர்கள் ரஷியாவில் படிப்பை தொடர மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமா? - மக்களவையில் டி.ஆர் பாலு கேள்வி
மாணவர்கள் ரஷியாவில் படிப்பை தொடர மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமா? என்று மக்களவையில் டி.ஆர் பாலு கேள்வி எழுப்பியுள்ளது.
புதுடெல்லி
உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட மாணவர்கள் ரஷியாவில் படிப்பை தொடர மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமா? என்று மக்களவையில் டி.ஆர் பாலு கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று காலையிலேயே திமுக மக்களவை எம்.பி டி.ஆர்.பாலு, நீட் விலக்கு மசோதா குறித்து விவாதிக்க கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர நோட்டீஸ் கொடுத்தார்.
அவை தொடங்கியவுடன் திமுக எம்.பி டி.ஆர்.பாலு பேசுகையில், "உக்ரைனிலிருந்து திரும்பிய இந்திய மருத்துவ மாணவர்களுக்காக மத்திய அரசு என்ன திட்டம் வைத்துள்ளது? ரஷியாவுடன் இந்திய அரசுக்கு இருக்கும் உறவைப் பயன்படுத்தி இந்த மாணவர்கள் ரஷியப் பல்கலைக்கழகங்களில் கல்வி பயில ஏற்பாடு செய்யப்படுமா?" என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு சபாநாயகர் ஓம் பிர்லா, "இது மருத்துவ மாணவர்கள் தொடர்பான விவகாரம். இது சுகாதார அமைச்சகத்தின் கீழ் வருகிறது" என்றார். அதேபோல் பிஎப் வட்டி விகித குறைப்பு குறித்து விவாதிக்க காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் நோட்டீஸ் கொண்டுவந்தன.