முட்டாள்தனமான மனிதருக்கு பதிலளிக்க முடியாது - மம்தா பானர்ஜியை சாடிய காங்கிரஸ் தலைவர்!
காங்கிரசுக்கு நாடு முழுவதும் 700 எம் எல் ஏக்கள் உள்ளனர்.மம்தா பனர்ஜி அத்தனை எம்.எல்.ஏக்களை கொண்டுள்ளாரா என கேள்வி.
கொல்கத்தா,
5 மாநில தேர்தலில் காங்கிரஸ் அடைந்த தோல்வி குறித்து மம்தா பானர்ஜி தெரிவித்த கருத்துக்கு மேற்கு வங்க காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஏ ஆர் சவுத்ரி,பதிலடி கொடுத்துள்ளார்.
முன்னதாக, 5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து மம்தா பானர்ஜி நேற்று பேசுகையில், “காங்கிரஸ் நம்பகத்தன்மையை இழந்து வருகிறது, காங்கிரசை நம்பி இருக்க முடியாது” என்று தெரிவித்திருந்தார்.
அவருடைய இந்த கருத்துக்கு பதிலடி தரும் விதமாக சவுத்ரி கூறியதாவது, “முட்டாள் மனிதருக்கு பதிலளிப்பது சரியான அணுகுமுறை அல்ல. காங்கிரசுக்கு நாடு முழுவதும் 700 எம் எல் ஏக்கள் உள்ளனர். டிடி(மம்தா பனர்ஜி) அத்தனை எம் எல் ஏக்களை கொண்டுள்ளாரா..?
எதிர்க்கட்சிகளின் மொத்த வாக்குப்பகிர்வு சதவீதத்தில், 20 சதவீதம் காங்கிரஸ் வசம் உள்ளது. மம்தாவிடம் இருக்கிறதா?
அவர் பாஜகவை மகிழ்விப்பதற்காக இப்படிச் சொல்கிறார். மேலும், அவர் பாஜகவின் ஏஜெண்ட் போல செயல்படுகிறார்.
இந்த விஷயம் தொடர்புடைய கருத்துக்களை பேச வேண்டும் என்பதற்காக அவர் இதுபோன்ற கருத்துக்களை கூறி வருகிறார்.
காங்கிரசுக்கு எதிராக ஏன் கருத்து கூறுகிறீர்கள்? காங்கிரஸ் இல்லையென்றால் மம்தா பானர்ஜி போன்றவர்கள் பிறந்திருக்க மாட்டார்கள். இதை அவர் நினைவில் கொள்ள வேண்டும்.
பாஜகவை மகிழ்விக்க அவர்கள் கோவா சென்றார்கள். அவர்கள் தான் காங்கிரசை தோற்கடித்தனர்.
நீங்கள் கோவாவில் காங்கிரசை தோற்கடித்தனர். இது அனைவருக்கும் தெரியும்.”
இவ்வாறு அவர் பேசினார்.
மம்தா பானர்ஜி நேற்று பேசுகையில், “காங்கிரஸ் கட்சி விரும்பினால் 2024- ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் இணைந்து போட்டியிட தயார். 5 மாநில தேர்தல் முடிவுகளை கண்டு சோர்வடைய வேண்டாம், நேர்மறையாக சிந்தியுங்கள். 5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என்று கூறுவது நடைமுறை சாத்தியம் அற்றது” என்றும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.