அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா முன்னணி நாடாக உயரும் - நிர்மலா சீதாராமன் உறுதி

தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, இந்தியா இன்னும் 25 ஆண்டுகளில் முன்னணி நாடாக உயரும் என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.

Update: 2022-03-10 23:23 GMT
Image Courtesy: PTI
கவுகாத்தி, 

அசாம் மாநில தலைநகர் கவுகாத்தியில், தொழிலதிபர்களுடன் பட்ஜெட்டுக்கு பிந்தைய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், “கடந்த ஆண்டு பட்ஜெட்டை போலவே இந்த ஆண்டு பட்ஜெட்டும் மூலதன செலவுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. உள்கட்டமைப்பு திட்டமிடல், முதலீடு ஆகியவற்றுக்கு பிரதமரின் கதிசக்தி திட்டம் வழிகாட்டும்.

உள்கட்டமைப்பு துறையில் பெரிய அளவில் முதலீடு செய்வது, பொருளாதாரம் மீண்டு வருவதற்கு எப்போதும் அவசியம். அதே சமயத்தில், தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவை முன்னணி நாடாக உயர்த்துவதற்கு பாடுபட்டு வருகிறோம். அதற்கு மின்னணு ரீதியாக இந்தியா தயாராகி வருகிறது.

நாட்டில் மின்னணு பல்கலைக்கழகம் உருவாக்கப்படும். நாட்டின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி, 75 டிஜிட்டல் வங்கிகள் அமைக்கப்படும். அத்துடன், ரிசர்வ் வங்கி, டிஜிட்டல் பணம் வெளியிட உள்ளது. உங்கள் பாஸ்போர்ட்டில் ‘சிப்’ பொருத்தப்பட்டு, இ-பாஸ்போர்ட்டாக வழங்கப்பட உள்ளது.

இந்தியா, இயற்கை விவசாயத்தை நோக்கி நடைபோட்டு வருகிறது. அதே சமயத்தில், டிரோன்கள் உதவியுடன் எரு, உரம் தெளிக்கப்பட உள்ளது. வேளாண் நிலங்களை அளவிடவும், பயிர்களின் அடர்த்தியை கணக்கிடவும், விளைச்சலை சிறப்பாக மதிப்பிடவும் டிரோன்கள் பயன்படுத்தப்பட உள்ளன” என்று அவர் பேசினார்.

மேலும் செய்திகள்