கிழக்கு உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்கள் பாதுகாப்பாக மீட்கப்படுவார்கள் - வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் தகவல்!
இந்தியர்களை மீட்பது குறித்து உக்ரைன் மற்றும் ரஷியாவுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம்.;
புதுடெல்லி,
இந்தியர்கள் மீட்பு பணி குறித்து மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அனைத்து நாடுகளுடன் குறிப்பாக உக்ரைன் மற்றும் ரஷியாவுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். இந்தியர்களை மீட்பது குறித்து ரஷிய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் கலந்துரையாடினார்.
உக்ரைனில் உள்ள இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்றுவது மட்டுமே எங்களது ஒரே நோக்கம். கிழக்கு உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்களை பாதுகாப்பாக வெளியேற்ற முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம்.
உக்ரைனில் உயிரிழந்த இந்தியர்கள் 2 பேரும் வெவ்வேறு சூழ்நிலைகளில் மரணம் அடைந்தனர். உயிரிழந்த மாணவர் நவீனின் உடலை பத்திரமாக தாயகம் கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக உக்ரைன் தூதரகத்துடன் தொடர்ந்து பேசி வருகிறோம்.
தலைநகர் கீவ் நகரிலிருந்து குறிப்பிட்ட எண்ணிக்கையிலான இந்திய தூதரக அதிகாரிகள் கடந்த திங்கட்கிழமையன்று லீவ் நகருக்கு சென்றுவிட்டனர். எனினும் தூதரகம் முழுமையாக மூடப்படவில்லை, தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.