ரெயிலில் டிக்கெட் இன்றி ‘ஓசி’யில் பயணிப்போர் அதிகரிப்பு
ரெயிலில் டிக்கெட் எடுக்காமல் இலவச பயணம் மேற்கொள்வோர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. 9 மாதங்களில் 1¾ கோடி பேர் அதிகாரிகளிடம் சிக்கி உள்ளனர்.;
டிக்கெட் இல்லாமல் பயணம்
ரெயிலில் டிக்கெட் இல்லாமல் பயணிக்கும் வழக்கம், இந்திய மக்களிடையே பெருகி வருகிறது. இது தொடர்பாக தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் மத்திய பிரதேசத்தை சேர்ந்த சந்திர சேகர் கவுர் என்பவர் கேள்வி எழுப்பி பதில் பெற்றுள்ளார்.
அந்த பதிலில் ரெயில்வே தெரிவித்துள்ள தகவல்கள் வருமாறு:-
1.78 கோடி பேர்
* 2021-22 நிதி ஆண்டின் முதல் 9 மாதங்களில் ரெயில்களில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்து மாட்டிக்கொண்டவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 78 லட்சம் ஆகும். இவர்கள் முன்பதிவு செய்யப்படாத லக்கேஜ்களுடன் பயணித்ததும் தெரிய வந்தது.
* உரிய டிக்கெட் இன்றி பயணம் செய்த இவர்களிடம் ரூ.1,017 கோடியே 48 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
* கொரோனா காலத்தில் பயணிகள் போக்குவரத்துக்கு கடுமையான கட்டுப்பாடுகள் போடப்பட்டிருந்தபோது இத்தகைய பயணிகளின் எண்ணிக்கை 27 லட்சம்.
முக்கிய காரணம்
* இப்பொழுதும் ரெயில்களில் டிக்கெட் இன்றி பயணிப்பதற்கு முக்கிய காரணங்களாக சொல்லப்படுவது, கொரோனா கால கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டாலும், விரைவு மற்றும் அதிவிரைவு ரெயில்களில் ஆன்லைன் முன்பதிவு மற்றும் வரையறுக்கப்பட்ட சேவைகளே இருப்பதுதான்.
* 2019-20 நிதி ஆண்டில் 1 கோடியே 10 லட்சம் பேர் டிக்கெட் இன்றி ரெயில்களில் பயணம் செய்து அகப்பட்டுக்கொண்டனர். இவர்களிடம் ரூ.561 கோடியே 73 லட்சம் அபராதமாக வசூல் செய்யப்பட்டுள்ளது.
* 2020 ஏப்ரல் மற்றும் 2021 மார்ச் இடையேயான ஓராண்டில் 27 லட்சத்து 57 ஆயிரம் பேர் மட்டுமே டிக்கெட் இன்றி பயணம் செய்து மாட்டிக்கொண்டனர். இவர்களிடம் ரூ.143 கோடியே 82 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
* நடப்பு நிதி ஆண்டில் இருக்கை முன்பதிவு இறுதி செய்த பிறகும், காத்திருப்பு பட்டியலில் இருந்த 52 லட்சத்துக்கும் அதிகமானோர் ரெயில்களில் பயணம் செய்யவில்லை.
* 2021 ஏப்ரல் முதல் டிசம்பர் வரையில் ரெயில்களில் 99.65 சதவீதத்தினர் முன்பதிவு செய்து பயணித்துள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.