‘ஹிஜாப்’ விவகாரத்தில் தொடர் போராட்டம்: அரசு கல்லூரியில் 58 முஸ்லிம் மாணவிகள் இடைநீக்கம்

‘ஹிஜாப்’ விவகாரத்தில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்ததால் சிராளகொப்பா அரசு கல்லூரியில் இருந்து 58 முஸ்லிம் மாணவிகள் அதிரடியாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையே குங்குமம் வைத்து வரும் மாணவர்களை தடுக்க கூடாது என மந்திரி நாகேஸ் உத்தரவிட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;

Update:2022-02-20 01:10 IST
கா்நாடகத்தில் ஹிஜாப் விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது.

தொடர் போராட்டம்

ஹிஜாப் அணிந்து பள்ளி, கல்லூரிக்கு வரும் முஸ்லிம் மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இதனால் முஸ்லிம் மாணவிகள் வகுப்பை புறக்கணித்துவிட்டு பள்ளி, கல்லூரி முன்பு தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இதேபோல், சிவமொக்கா மாவட்டம் சிகாரிப்புரா தாலுகா சிராளகொப்பாவில் உள்ள அரசு பி.யூ. கல்லூரியிலும் முஸ்லிம் மாணவிகள் 58 பேர், ஹிஜாப் அணிந்து வர அனுமதி மறுக்கப்பட்டதால் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

முதல்வர் பேச்சுவார்த்தை

இதுதொடர்பாக கல்லூரி முதல்வர் சோமசேகர், மாணவிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ஐகோர்ட்டு தீர்ப்பை மதித்து மத அடையாள ஆடை அணிந்து வரக்கூடாது என்றும், ஐகோர்ட்டில் இறுதி தீர்ப்பு வரும் வரை அமைதி காக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். ஹிஜாப்பை அகற்றிவிட்டு வகுப்பறைக்கு செல்ல வேண்டும் என்று கூறினார்.

ஆனால் ஹிஜாப்பை அகற்ற மறுத்த மாணவிகள், ஐகோர்ட்டு இறுதி தீர்ப்பு வரும் வரை கல்லூரிக்கு வருவதில்லை என்று கூறிவிட்டு அங்கிருந்து வீட்டுக்கு திரும்பி சென்றுவிட்டனர்.

58 மாணவிகள் இடைநீக்கம்

இந்த விவகாரம் குறித்து கல்லூரி முதல்வர் சோமசேகர், கல்லூரி பேராசியர்கள், நிர்வாகிளுடன் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் முஸ்லிம் மாணவிகள் 58 பேரையும் கல்லூரியில் இருந்து இடைநீக்கம் செய்து முதல்வர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ஹிஜாப் விவகாரத்தில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் மாணவிகளால் மற்ற மாணவ-மாணவிகளின் படிப்புக்கு தொந்தரவு ஏற்பட்டுள்ளது. ஐகோர்ட்டு தீர்ப்பை மதிக்காமல் மாணவிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

மந்திரி எச்சரிக்கை

இந்த நிலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு குங்குமம் வைத்து வரும் மாணவர்களை தடுக்க கூடாது என்றும், மீறினால் தலைமை ஆசிரியர், கல்லூரி முதல்வர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

ஒப்பிட்டு பேசுவதை...

பள்ளி, கல்லூரிகளுக்கு மத அடையாள ஆடை அணிந்து வருவதற்கு கர்நாடக ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளது. இதனை ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டும். ஐகோர்ட்டு உத்தரவை பின்பற்றுவது நமது கடமையாகும். அதற்காக குங்குமம், வளையல் அணிந்து வருவதை எதிர்ப்பது சரியல்ல. ஹிஜாப் அணிவது ஒருமதத்தின் அடையாளமாக உள்ளது. வளையல், குங்குமம் ஒரு அலங்கார பொருளாகும்.

ஹிஜாப்பையும், குங்குமத்தையும் ஒப்பிட்டு பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. மாநிலத்தில் சில பள்ளி, கல்லூரிகளில் குங்குமம் வைத்து கொண்டு வந்த மாணவ, மாணவிகளை ஆசிரியர்கள் தடுத்து நிறுத்தியது பற்றி எனது கவனத்திற்கும் வந்தது. இதுபோன்ற சம்பவங்களை ஏற்றுக் கொள்ள முடியாது.

கடும் நடவடிக்கை

பள்ளி, கல்லூரிகளுக்கு குங்குமம் வைத்து கொண்டு வரும் மாணவ, மாணவிகளை தடுக்க கூடாது. மீறி தடுத்தால், சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள், முதல்வர்கள், தலைமை ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பாக கல்வித்துறை அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

குங்குமம், திலகமிட்டு வரும் மாணவர்களை தடுக்கும் ஆசிரியர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள். ஹிஜாப் ஒரு மதத்தின் அடையாளம் என்பதால், அதனை அணிய வேண்டாம் என்று கூறுகிறோம்.

அதே நேரத்தில் அலங்கார பொருட்களான வளையல், குங்குமம் உள்ளிட்டவற்றை வைத்து கொண்டு பள்ளி, கல்லூரிகளுக்கு வரும்படி எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. அது மாணவ, மாணவிகளின் விருப்பமாகும்.

இவ்வாறு பி.சி.நாகேஸ் கூறினார்.

பரபரப்பு

ஹிஜாப் அணிய அனுமதி கோரி போராட்டம் நடத்தி வரும் மாணவிகள், கடந்த சில நாட்களாக குங்குமம், திருநீறு பூசி வரவும் தடை விதிக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பி வரும், நிலையில் மந்திரியின் இந்த உத்தரவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்