வேளாண் ட்ரோன் திட்டம் ஒரு புதிய புரட்சியின் ஆரம்பம்: பிரதமர் மோடி

100 கிசான் டிரோன்களை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதன்மூலம் விவசாய துறையில் நவீனம் நுழைகிறது.

Update: 2022-02-19 16:38 GMT
பட்ஜெட் அறிவிப்பு

மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கடந்த 1-ந் தேதி நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்து பேசினார்.
அப்போது அவர் விவசாய துறையில் கிசான் டிரோன்கள் (ஆளில்லாகுட்டி விமானம்) பயன்பாடு ஊக்குவிக்கப்படும் என்று அறிவித்தார்.

விவசாயம், நில பதிவுகளை டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் பூச்சிக்கொல்லிகள், உரங்கள் உள்ளிட்ட ஊட்டச்சத்துகளை தெளித்தல் ஆகியவற்றில் டிரோன் தொழில்நுட்பங்களை மேம்படுத்தும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பு நடைமுறைக்கு வந்துள்ளது.

100 டிரோன்கள்

அந்த வகையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாயிகள் விதைகள், உரங்கள், பூச்சிக்கொல்லிகள் ஆகியவற்றை தெளிப்பதற்கு உதவும் வகையில் தமிழ்நாட்டின் சேலம் உள்ளிட்ட இடங்களில் 100 கிசான் டிரோன்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

காணொலி காட்சி வழியாக நடந்த இந்த நிகழ்ச்சியில் அவர் பேசும்போது கூறியதாவது:-

இந்தியாவில் ‘டிரோன் ஸ்டார்ட்-அப்’ கலாசாரம் தயாராகி வருகிறது. அவற்றின் எண்ணிக்கை தற்போதைய 200 என்ற எண்ணிக்கையில் இருந்து பல்லாயிரங்களாக விரைவில் அதிகரிக்கும். இது மிகப்பெரிய அளவில் வேலைவாய்ப்புகள் உருவாக வழிவகுக்கும். கொள்கைகள் சரியாக இருந்தால், நாடு எவ்வளவு உயரத்தில் பறக்க முடியும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு ஆகும்.

முன்னுரிமை

சில ஆண்டுகளுக்கு முன்பு வரையில் டிரோன்கள் பெரும்பாலும் பாதுகாப்புத்துறையுடன் மட்டுமே தொடர்புடையவையாக இருந்தன.
டிரோன் துறையை திறப்பது குறித்த அச்சத்தில் எங்கள் அரசு, நேரத்தை வீணடிக்கவில்லை. இந்தியாவின் திறமைமிக்க இளம்தலைமுறையிரைன நம்பி புதிய மனநிலையுடன் முன்னேறி உள்ளது.

பட்ஜெட்டிலும், கொள்கை நடவடிக்கைகளிலும் தொழில் நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு எனது அரசு முன்னுரிமை அளித்துள்ளது.

டிரோன்கள் பல்வேறு வகையிலான பயன்பாடுகளை கொண்டிருக்கிறது. அவை கிராமங்களில் நில உரிமையை பற்றிய ஆவணங்களை உருவாக்கவும், மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளை கொண்டு செல்லவும் சுவாமித்வா யோஜனா திட்டத்தில் பயன்படுத்தப்பட்டன.

ஒரு புதிய புரட்சியின் தொடக்கம் கிசான் டிரோன்கள் ஆகும். விவசாயிகள் தங்கள் விளைபொருட்களான காய்கறிகள், பழங்கள், பூக்கள் போன்றவற்றை குறைவான நேரத்தில் சந்தைகளுக்கு கொண்டு செல்வதற்கு அதிகதிறன் கொண்ட டிரோன்களை பயன்படுத்தி தங்கள் வருமானத்தை அதிகரிக்க முடியும்.

புதிய அத்தியாயம்

21-ம் நூற்றாண்டில் நவீன விவசாய வசதிகளை வழங்குவதில் இது ஒரு அத்தியாயம் ஆகும். மேலும் இது டிரோன் துறையின் வளர்ச்சியில் ஒரு மைல்கல். இது எல்லையற்ற வாய்ப்புகளை உருவாக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையொட்டி அவர் டுவிட்டரில் ஒரு பதிவும் வெளியிட்டார்.

அதில் அவர், “நாடு முழுவதும் 100 இடங்களில் கிசான் டிரோன்கள் செயல்படுவதை காண்பதில் மகிழ்ச்சி. கருடா இந்தியா என்ற துடிப்பான ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் பாராட்டுக்குரிய முயற்சி இது. புதுமையான தொழில்நுட்பம் நமது விவசாயிகளுக்கு அதிகாரம் வழங்குவதோடு, விவசாயத்தை மேலும் லாபமுள்ளதாகக்கும்” என கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்